கர்நாடக மாநில பா.ஜனதா தலைவர் ஆனார் நளின்குமார் கட்டீல் 3 ஆண்டுகள் பதவி வகிப்பார்

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக நளின்குமார் கட்டீல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 3 ஆண்டுகள் அவர் பதவி வகிப்பார்.

Update: 2020-01-16 23:00 GMT
பெங்களூரு, 

கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக நளின்குமார் கட்டீல் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் 3 ஆண்டுகள் அவர் பதவி வகிப்பார்.

தலைவர் பதவிக்கு தேர்தல்

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு கவிழ்ந்து பா.ஜனதா ஆட்சி அமைந்தது. இதையடுத்து, மாநில தலைவராக இருந்த எடியூரப்பா முதல்-மந்திரி ஆனார். அதைத்தொடர்ந்து, கர்நாடக மாநில தலை வராக தட்சிண கன்னடா மாவட்டத்தை சேர்ந்த நளின்குமார் கட்டீல் எம்.பி.யை நியமித்து பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டது. ஆனால் மாநில தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டு நளின்குமார் கட்டீல் அதிகாரப்பூர்வாக தேர்ந்தெடுக்கப்படாமல் இருந்தார்.

இதையடுத்து, கர்நாடக மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் நேற்று பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான அதிகாரியாக மந்திரி சி.டி.ரவி நியமிக்கப்பட்டு இருந்தார்.

நளின்குமார் கட்டீல் தேர்வு

மாநில தலைவர் பதவிக்காக நளின்குமார் கட்டீல் மனு தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்ைல. அதைத்தொடர்ந்து, கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக ஒருமனதாக நளின்குமார் கட்டீல் தேர்வு செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். கர்நாடக மாநில பா.ஜனதா தலைவராக வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் 16-ந் தேதி வரை நளின்குமார் கட்டீல் இருப்பார். அதாவது இன்னும் 3 ஆண்டுகள் அவர் மாநில தலைவராக இருப்பார்.

நளின்குமார் கட்டீல் தற்போது எம்.பி.யாக இருந்து வருகிறார். தட்சிண கன்னடா மாவட்டத்தில் இருந்து 3 முறை எம்.பி.யாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.

மேலும் செய்திகள்