சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக புகார் முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் அமலாக்கத்துறை முன் ஆஜர் அதிகாரிகள் விசாரணை

சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக கூறப்படும் புகாரின் பேரில் முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நேற்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார்.

Update: 2020-01-16 22:30 GMT
பெங்களூரு, 

சட்டவிரோதமாக சொத்து குவித்ததாக கூறப்படும் புகாரின் பேரில் முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் நேற்று அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் 4 மணிநேரம் விசாரணை நடத்தினார்கள்.

கே.ஜே.ஜார்ஜிக்கு நோட்டீசு

கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கே.ஜே.ஜார்ஜ். முன்னாள் மந்திரியான இவர், சட்டவிரோதமாக சொத்து குவித்து இருப்பதாகவும், வெளிநாடுகளிலும் சொத்து சேர்த்திருப்பதாகவும், கே.ஜே.ஜார்ஜ் தனது மகன், மகளின் பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகவும் கூறி சமூக ஆர்வலர் ரவி கிருஷ்ணாரெட்டி என்பவர் அமலாக்கத்துறையில் புகார் அளித்திருந்தார்.

லோக் அயுக்தாவிடம் கே.ஜே.ஜார்ஜ் அளித்த தனது சொத்துகள் பற்றி அறிக்கையில், வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பது குறித்து எந்த விவரமும் தெரிவிக்காத காரணத்தால் ரவி கிருஷ்ணாரெட்டி அமலாக்கத்துறையில் புகார் அளித்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சட்ட விரோதமாக சொத்து குவித்து இருப்பதாக கூறப்படும் புகாரில் விசாரணைக்கு ஆஜராகும்படி முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோருக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி நோட்டீசு அனுப்பினார்கள். ஆனால் விசாரணைக்கு ஆஜராக கே.ஜே.ஜார்ஜ் காலஅவகாசம் கேட்டு இருந்தார்.

விசாரணைக்கு ஆஜர்

இந்த நிலையில், அமலாக்கத்துறையினர் விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீசு அனுப்பி இருந்ததால், நேற்று காலை பெங்களூரு சாந்திநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு கே.ஜே.ஜார்ஜ் வந்தார். அப்போது அவர் தனது சொத்துக்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை எடுத்து வந்திருந்தார். பின்னர் அதிகாரிகள் முன்பு கே.ஜே.ஜார்ஜ் விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் சொத்து விவரங்கள் குறித்து முதலில் விசாரித்து அதிகாரிகள் தகவல்களை பெற்றுக் கொண்டதாக தெரிகிறது.

அதன்பிறகு, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கி வைத்திருப்பது, மகன், மகளின் பெயரில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாக கூறப்படுவது குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு கே.ஜே.ஜார்ஜ் உரிய பதில் அளித்ததாகவும், தனது சொத்துகள் பற்றிய அனைத்து விவரங்களையும் அதிகாரிகளிடம் அவர் அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. கே.ஜே.ஜார்ஜிடம் அதிகாரிகள் 4 மணிநேரம் தொடர் விசாரணை நடத்தினார்கள்.

நிரபராதி என்பதை...

இந்த விசாரணை முடிந்து வெளியே வந்த கே.ஜே.ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான் சட்டவிரோதமாக வெளிநாடுகளில் சொத்து குவித்திருப்பதாகவும், மகன், மகளின் பெயரில் முதலீடு செய்திருப்பதாகவும் அமலாக்கத்துறையில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த புகாரின் பேரில் என்னிடம் விசாரணை நடத்த அதிகாரிகள் நோட்டீசு அனுப்பி இருந்தனர். அதன்படி, விசாரணைக்கு ஆஜரானேன். அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தேன். அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன். அதிகாரிகள் கேட்ட ஆவணங்களையும் அளித்துள்ளேன். என் மீது புகார் அளித்ததும், தவறு செய்து விட்டேன் என்று ஆகி விடாது.

என் மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். விசாரணை முடிவில் தான் உண்மை என்பது தெரியவரும். இந்த வழக்கில் நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் நான் ஏன் பயப்பட வேண்டும். அதிகாரிகள் மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராவேன்.

இவ்வாறு கே.ஜே.ஜார்ஜ் கூறினார்.

பரபரப்பு

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோரை அமலாக்கத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி கே.ஜே.ஜார்ஜ் சட்டவிரோதமாக சொத்து குவித்த வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு உள்ளாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்