கறம்பக்குடி அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 16 பேர் காயம்

கறம்பக்குடி அருகே நடைபெற்ற ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 16 பேர் காயமடைந்தனர்.

Update: 2020-01-16 23:00 GMT
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரத்தில் புனித அடைக்கலமாதா ஆலயம் உள்ளது. இங்குள்ள 3 ராஜாக்கள் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஆண்டு தோறும் நடத்தப்படும். இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு நேற்று நடைபெற்றது. இதற்காக கோவில் திடலில் வாடிவாசல் அமைக்கப்பட்டு தடுப்பு கட்டைகள் போடப்பட்டிருந்தது.

நேற்று காலையில் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். இதேபோல் மாடுபிடி வீரர்களுக்கு வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேஸ்வரர் தலைமையில், டாக்டர் குழுவினர் உடல் தகுதி பரிசோதனை செய்தனர். பின்னர் மாடுபிடி வீரர்கள், புதுக்கோட்டை கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, கறம்பக்குடி தாசில்தார் சேக்அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் ஜல்லிக்கட்டு உறுதி மொழி எடுத்து கொண்டனர்.

இதைதொடர்ந்து ஜல்லிக்கட்டை புதுக்கோட்டை மாவட்ட வருவாய் அதிகாரி சரவணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. இதையடுத்து வாடிவாசலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. அப்போது பொதுமக்கள் கைதட்டி, ஆரவாரம் செய்தனர். சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அதன் திமிலை பிடித்து அடக்கினர். சில காளைகள் பிடிக்க வந்த வீரர்களை தூக்கி வீசி சென்றன.

16 பேர் காயம்

இந்த ஜல்லிக்கட்டில் திருச்சி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 357 காளைகள் பங்கேற்றன. 120 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், குக்கர், சைக்கிள், தங்க நாணயம், சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்து வந்த காளைகள் முட்டியதில் வீரர்கள் 6 பேர், பார்வையாளர்கள் 10 பேர் என மொத்தம் 16 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர்.

இந்த ஜல்லிக்கட்டு விழாவையொட்டி புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்தி குமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

மேலும் செய்திகள்