புதுச்சேரியில் பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடங்குகிறது

புதுவையில் பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடங்கி நடக்கிறது.

Update: 2020-01-14 22:30 GMT
புதுச்சேரி,

புதுவையில் பறவைகள் கணக்கெடுப்பு நாளை தொடங்கி நடக்கிறது.

சுற்றுச்சூழல் கல்வி கழகத்தின் பறவை ஆர்வலர்களான சிவ.கணபதி மற்றும் சுரேந்தர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கணக்கெடுப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை (வியாழக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை பறவைகள் கணக்கெடுப்பு நடக்கிறது. கடந்த 5 ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. இந்த கணக்கெடுப்பில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம். ஏரி, குளம், ஆறு, தோட்டம், பள்ளி, கல்லூரி, அலுவலகம், வீட்டுமாடி என ஏதாவது ஒரு இடத்தில் தொடர்ச்சியாக குறைந்தது 15 நிமிடங்களுக்கு பறவைகளை பார்த்து அவற்றை அடையாளம் கண்டு பட்டியல் தயாரித்து https://eb-i-rd.org/in-d-ia/ இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். பறவைகளை பார்க்க சிறந்தநேரம் அதிகாலை மற்றும் மாலை வேளை. எனினும் உங்களால் எப்போது முடியுமோ, அப்போதுகூட பார்த்து பட்டியலிடலாம். ஸ்மார்ட் போன் வைத்திருப்பவர்கள் eb-i-rd என்ற செயலி மூலம் பறவை பட்டியலை பதிவேற்றம் செய்யலாம்.

362 வகை பறவைகள்

பறவைகள் கணக்கெடுப்பு ஒரே நேரத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவதால் பறவைகளின் எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் ஏற்றத்தாழ்வுகளை ஆண்டுதோறும் கண்காணித்து அதற்கான காரணங்களை கண்டறிய முடியும். கடந்த ஆண்டு புதுச்சேரியிலிருந்து பொங்கல் நாட்களில் 5,119 பறவைகள் பட்டியலிடப்பட்டன. மொத்தம் 362 வகையான பறவைகள் பதிவு செய்யப்பட்டன. அதிகமாக பதிவு செய்யப்பட்ட பறவைகளில் முதல் 5 இடங்களில் காகம், மைனா, அண்டங்காக்கை, கரிச்சான் மற்றும் பச்சைக்கிளி ஆகியவை இடம்பெற்றன.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்