குமரி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாட்டம்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் மற்றும் எம்.பி. அலுவலகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, எச்.வசந்தகுமார் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டார்.
நாகர்கோவில்,
தமிழகத்தில் ஆண்டுதோறும் தமிழ் மாதமான தை மாதம் முதல் நாள் தை திருநாளாகவும், தமிழர் திருநாளாகவும், பொங்கல் பண்டிகையாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் திருநாள் இன்று (புதன்கிழமை) வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி நேற்று பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கலெக்டர் அலுவலக முன்புறத்தில் வண்ண கோலமிட்டு அலங்கரிக்கப்பட்டு இருந்தது. குத்துவிளக்கேற்றி, கரும்பு, பழம், தேங்காய் போன்றவற்றை படையல் வைத்து, புதுப்பானையில் புத்தரிசியிட்டு பொங்கலிடப்பட்டது.
விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி, பொங்கலிட்டார். கலெக்டர் அலுவலக அதிகாரிகள், பணியாளர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள், ஊழியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அதிகாரி உள்பட ஏராளமான பெண்கள் பாரம்பரிய உடையான சேலை அணிந்து வந்திருந்தனர். அதேபோல ஆண்களில் பலரும் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை அணிந்து வந்திருந்தனர்.
இதேபோல் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்திலும் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், நகர்நல அதிகாரி கின்சால், நகரமைப்பு ஆய்வாளர் கெபின்ஜாய் மற்றும் அனைத்து ஆண், பெண் அதிகாரிகள், பணியாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட ஆணையர் உள்பட பெரும்பாலான ஆண், பெண் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள், ஊழியர்கள் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை மற்றும் சேலை அணிந்து வந்து பங்கேற்றனர்.
தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமான குமரி மாவட்ட மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பொங்கல் விழாவை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா நடந்தது. இதில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் பாரம்பரிய உடைகளை அணிந்து இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில் கல்லூரி முதல்வர் (பொறுப்பு) வேலாயுதம் பொங்கல் விழாவை நடத்தி, சமத்துவ பொங்கலின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறினார். மேலும் மாணவ- மாணவிகளுக்கு உறி அடித்தல், வடம் இழுத்தல் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
இதேபோல் நாகர்கோவில் கோட்டார் கவிமணி தேசிக விநாயகம்பிள்ளை அரசு தொடக்கப்பள்ளியிலும் நேற்று பொங்கல் விழா நடந்தது. இதில் ஆசிரியைகள் பொங்கல் வைத்தனர். ஆண், பெண் ஆசிரிய, ஆசிரியைகள் பாரம்பரிய உடையான வேட்டி- சட்டை மற்றும் சேலை அணிந்து பங்கேற்றனர். மற்றும் மாணவ- மாணவிகளில் பெரும்பாலானோர் வேட்டி- சட்டையும், சேலையும் அணிந்திருந்தனர். இந்த விழாவின் பொங்கல் பண்டிகையை நினைவு கூறும்விதமாக மாணவ- மாணவிகள் கரும்பு தின்றனர்.
பொங்கல் திருநாளை முன்னிட்டு நாகர்கோவில் வடசேரியில் உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. அப்போது அலுவலகத்தின் முன்புறம் 3 பானைகளில் பொங்கல் வைத்து விழா கொண்டாடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக எச்.வசந்தகுமார் எம்.பி. கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
பின்னர் இனிப்பு பொங்கல் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன், முருகேசன், காலபெருமாள், ஜெரால்டு கென்னடி, செல்வராஜ், தங்கம் நடேசன், அருள் சபிதா, ஹெலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.