கடலூரில், அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடலூர் முதுநகரில் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கடலூர்,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வலியுறுத்தி கடலூர் முதுநகர் மணிக்கூண்டு அருகில் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஜமாஅத் நிர்வாகிகள் தலைமை தாங்கினர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் ஷாநவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெற வலியுறுத்தி பேசினர்.
அதைத்தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் மிக மோசமான சட்டம். இந்த சட்டத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் அவர்களின் உணர்வுகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. இந்திய குடிமகன் என்பதற்கு சாட்சியாக 21 ஆவணங்களை கேட்கிறார்கள். ஆனால் எந்த குடிமகனும் அப்படி ஆவணங்களை சமர்ப்பிக்க வாய்ப்பு இல்லை.
நரிக்குறவர்கள், மலைவாழ் மக்களிடம் இந்த ஆவணங்கள் இருக்குமா? இந்துக்களாக இருக்கும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, குடிசை வீடுகளில் வாழ்கிற, இன்னும் மின்சார இணைப்பு கூட பெறாத மக்கள் இந்த ஆவணங்களை வைத்திருக்க வாய்ப்பு உள்ளதா? சிறுபான்மையினருக்கு எதிராக, மத்திய அரசு வேண்டும் என்றே இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது. மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை அனைத்து ஜனநாயக சக்திகளோடு சேர்ந்து இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம்.
நாகர்கோவிலில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். அவரை சுட்டுக்கொன்றது யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அண்டை மாநிலமான புதுச்சேரி உள்பட 11 மாநில முதல்-மந்திரிகள் குடியுரிமை திருத்த சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.
சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக இந்த அரசு இருக்குமானால், எங்கள் பதவியே போனாலும் இந்த சட்டத்தை நாங்கள் அமல்படுத்த மாட்டோம் என்று இந்த அரசு சொல்ல தயாரா? என்று கேள்வி எழுப்புகிறேன். நரேந்திரமோடி பதவி ஏற்ற போது, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை தருவேன் என்றார். ஆனால் பொருளாதார வீழ்ச்சியால் 1 கோடி பேர் வேலை இழந்து இருக்கிறார்கள்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.
முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் ஆனந்த், மாநில மாணவரணி செயலாளர் அருள்பாபு, மாவட்ட இளைஞரணி செயலாளர் செந்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட துணை செயலாளர் திருமேனி, நகர செயலாளர் செந்தில், முன்னாள் கவுன்சிலர் நவ்ஷாத் அலி, தமிழக வாழ்வுரிமை கட்சி நகர தலைவர் சதீஷ், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் பாருக்கான், ஒன்றிய இளைஞரணி தனஞ்செயன், மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ராஜேஷ் மற்றும் கடலூர் முதுநகர் அனைத்து முஸ்லிம் ஜமாஅத் கூட்டமைப்பு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் எம்.கே.ஷேக் நன்றி கூறினார்.
முன்னதாக அங்குள்ள ஜூம்மா பள்ளிவாசலில் இருந்து ஜமாஅத் அமைப்பினர் கையில் தேசிய கொடியை ஏந்தியபடி பேரணியாக புறப்பட்டு மணிக்கூண்டை வந்தடைந்தனர்.