ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து பெரம்பலூரில் ஆட்டோ டிரைவரிடம் நூதன முறையில் ரூ.30 ஆயிரம் மோசடி

ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து பெரம்பலூரில் ஆட்டோ டிரைவரிடம் நூதன முறையில் ரூ.30 ஆயிரம் மோசடி செய்த டிப்-டாப் ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2020-01-09 22:30 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர் அருகே உள்ள புதுநடுவலூர் கிராமம் ஆதிதிராவிடர் தெருவை சேர்ந்தவர் பாலகிரு‌‌ஷ்ணன்(வயது 47). இவர் வேப்பந்தட்டை தாலுகா கிரு‌‌ஷ்ணாபுரம் மின்வாரிய அலுவலகத்தில் போர்மேனாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் பாலகிரு‌‌ஷ்ணன் தனது மருமகனும், ஆட்டோ டிரைவரான பாலமுருகனிடம்(25) ஏ.டி.எம். கார்டை கொடுத்து பொங்கல் செலவிற்கு பணம் எடுத்து வருமாறு கூறியுள்ளார். இதனால் பாலமுருகன் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சித்துள்ளார்.

அப்போது அவருக்கு பின்னால் நின்ற சுமார் 50 வயது மதிக்கத்தக்க பேண்ட்- சட்டை அணிந்திருந்த டிப்- டாப் ஆசாமி ஒருவர், பணம் எடுக்க உதவி செய்வது போல் நடித்து பாலமுருகனிடம் ஏ.டி.எம். கார்டை வாங்கியுள்ளார். பின்னர் அவர் பாலமுருகனின் கவனத்தை திசை திருப்பி பணம் வரவில்லை என்று கூறி, அவரிடம் வேறு ஏ.டி.எம். கார்டை மாற்றி கொடுத்துவிட்டதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து பாலமுருகன் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே கல்யாண் நகர் பகுதியில் உள்ள அதே தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மற்றொரு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுக்க முயற்சித்த போது ஏ.டி.எம். கார்டின் பின்கோடு தவறு என வந்துள்ளது.

இதனை உடனடியாக பாலமுருகன் தனது மாமனார் பாலகிரு‌‌ஷ்ணனுக்கு செல்போனில் கூறியுள்ளார். அவர் கார்டில் யார் பெயர் உள்ளது என கேட்டுள்ளார். கார்டில் வேறு ஒருவரது பெயர் இருப்பதை கண்டு பாலமுருகன் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து பாலகிரு‌‌ஷ்ணன் உடனடியாக வெங்கடேசபுரத்தில் அந்த தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்று அதிகாரிகளிடம் நடந்த சம்பவத்தை கூறி தனது ஏ.டி.எம். கார்டை பிளாக் செய்துள்ளார். இதற்கிடையே பாலகிரு‌‌ஷ்ணனின் ஏ.டி.எம். கார்டு மூலம் டிப்- டாப் ஆசாமி ரூ.20 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.30 ஆயிரம் எடுத்துள்ளார். இது பாலகிரு‌‌ஷ்ணனின் செல்போனிற்கு குறுஞ்செய்தியாக வந்துள்ளது.

பின்னர் அந்த ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வங்கி அதிகாரிகள் பார்த்த போது டிப்-டாப் ஆசாமி ஒருவர் பாலகிரு‌‌ஷ்ணனின் ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.30 ஆயிரம் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து பாலகிரு‌‌ஷ்ணன் கேமராவில் பதிவான காட்சிகளுடன் இது தொடர்பாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி டிப்-டாப் ஆசாமியை வலைவீசி தேடி வருகின்றனர். ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவி செய்வது போல் டிப்-டாப் ஆசாமி ஆட்டோ டிரைவரிடம் வேறு ஒரு கார்டை கொடுத்து நூதன முறையில் ரூ.30 ஆயிரம் மோசடி செய்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்