தேன்கனிக்கோட்டை அருகே, பயிர்களை சேதப்படுத்திய காட்டு யானைகள் - விவசாயிகள் கவலை

தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

Update: 2020-01-09 22:15 GMT
தேன்கனிக்கோட்டை, 

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல குழுக்களாக முகாமிட்டு சுற்றித் திரிகின்றன. மேலும் இவைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள தக்காளி, சோளம், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு காட்டு யானைகள் பேவநத்தம், பாலேகுளி, சின்னட்டி, திம்மசந்திரம், குருபட்டி, கிரியானபள்ளி, மாரசந்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் புகுந்தது. பின்னர் அவைகள் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பயிர்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் அங்கு சென்று சேதமடைந்த பயிர்கள் குறித்து விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர். அப்போது அட்டகாசம் செய்யும் யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தீபக்பில்கி யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டியடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை வனச்சரகர் சுகுமார் தலைமையில் வனவர் கதிரவன் மற்றும் வேட்டை தடுப்பு அலுவலர்கள், வனத்துறையினர் யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்