வால்பாறையில் சம்பவம்: பள்ளிக்கூட மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது
வால்பாறையில் பள்ளிக்கூட மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. மதிய உணவு சாப்பிட மாணவ-மாணவிகள் வெளியேறியதால் உயிர் தப்பினர்.
வால்பாறை,
வால்பாறை அருகே உள்ள காஞ்சமலை எஸ்டேட் பகுதியில் 61 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கூடம் உள்ளது. இங்கு தற்போது 12 மாணவர்களும்,22 மாணவிகளும்,மொத்தம் 34 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றார்கள். இரண்டு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த பள்ளிக் கட்டிடத்தை பல முறை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளது. இதனால் மழை காலத்தில் பள்ளிக்கூடத்தின் மேற்கூரை வழியாக மழைத் தண்ணீர் ஒழுகும். இந்த நிலையில் காஞ்சமலை எஸ்டேட் நிர்வாகம் சார்பில், பள்ளிக்கூடத்தின் ஒரு பகுதியில் மேற்கூரை சீரமைப்பு பணி நடந்து வந்தது. இதற்கிடையில் அந்த கட்டிடத்தின் மற்றொரு பகுதியிலேயே மாணவ-மாணவிகளும் இருந்து படித்து வந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் மாணவ,மாணவிகள் சாப்பிடுவதற்காக அந்த கட்டிடத்தில் இருந்து வெளியேறி, பள்ளிக்கூட மைதானத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
இந்த நிலையில் சீரமைப்பு பணி நடந்த வகுப்பறையின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. கட்டிடத்தின் ஓடுகளும், மரங்களும் விழுந்து நொறுங்கின. நல்லவேளையாக மாணவ,மாணவிகள் வெளியில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததால் பெரிய விபத்தில் இருந்து தப்பினர். இது குறித்து உடனே தலைமையாசிரியர் பாலாஜிஅருண்கணேஷ் வட்டார கல்வி அலுவலருக்கு தகவல் கொடுத்தார். பின்னர் அவரது உத்தரவின் பேரில் மாணவ,மாணவிகளின் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து பள்ளிக் கட்டிடங்களையும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து பழமையான பள்ளிக் கட்டிடங்களை மாற்றி அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான புதிய பள்ளிக் கட்டிடங்கள் கட்டித் தருவதற்கு கல்வித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.