கள்ளக்குறிச்சியில் தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம், சாலைமறியலில் ஈடுபட்ட 218 பேர் கைது

கள்ளக்குறிச்சியில் தொழிற்சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டத்தால் ஆட்டோக்கள் ஓடவில்லை.

Update: 2020-01-08 22:30 GMT
கள்ளக்குறிச்சி, 

மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் 218 பேர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான ரெயில்வே துறை, தொலைத்தொடர்புத்துறை, வங்கி, காப்பீட்டுத்துறை ஆகிய துறைகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறவும், விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலை நிர்ணயம் செய்யவும், விவசாய தொழிலாளர்களுக்கு வேலைக்கான உத்தரவாதம் அளிக்கவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தவும், விவசாய கடன்களை ரத்து செய்யவும் வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று அகில இந்திய அளவிலான வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனால் கள்ளக்குறிச்சியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் செயல்பட வில்லை. இதனால் வங்கி சேவைகள் அனைத்தும் முடங்கியது. வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப் பட்டனர்.

தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்சங்கத்தினர் கள்ளக்குறிச் சியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு அன்பழகன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கள்ளக் குறிச்சி நான்குமுனை சந்திப்பில் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் சார்பில் சி.ஐ.டி.யூ. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஸ்டாலின்மணி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 56 பேரை போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே அசகளத்தூர் பஸ்நிறுத்தம் அருகில் விவசாய தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் கொளஞ்சி தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். சின்னசேலம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் முத்துவேல் தலைமையில் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உளுந்தூர்பேட்டை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமையில் சாலைமறியல் செய்த 9 பெண்கள் உள்பட 79 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் மின்வாரிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் விஜிகுமார் தலைமையில் சாலை மறியல் செய்த 5 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். திருக்கோவிலூர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கத்தினர் வட்ட தலைவர் ராமுர்த்தி தலைமையிலும், எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு எல்.ஐ.சி. ஊழியர் சங்கத்தினர் முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கராபுரம் மும்முனை சந்திப்பில் வட்ட தலைவர் நாகராஜ் தலைமையில் சாலை மறியல் செய்த 52 பேர் கைது செய்யப்பட்டனர்.அதே போல் சங்கராபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பகண்டை கூட்டுரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் மாவட்ட துணைத்தலைவர் பொன்னுசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டங்களில் மொத்தம் 28 பெண்கள் உள்பட 218 பேர் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் மாலை 6 மணி அளவில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கள்ளக் குறிச்சியில் உள்ள ஆட்டோ ஓட்டுனர்கள், உரிமையாளர்கள் சங்கத்தினர் கலந்து கொண்டனர். இதனால் கள்ளக்குறிச்சியில் சுமார் 2 ஆயிரம் ஆட்டோக்கள் காலை 6 மணிமுதல் மாலை 6 மணி வரை ஓட வில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆட்டோ ஓட்டுனர்கள், மோட்டார் வாகனச் திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். ஆட்டோ மற்றும் மோட்டார் வாகன பணியாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க தலைவர் செல்வம் தலைமையில் செயலாளர் மணிகண்டன், வங்கி அலுவலர் சங்க நிர்வாகி கல்யாணசுந்தரம், சட்ட ஆலோசகர் மணிகண்ணு ஆகியோர் முன்னிலையில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் திரளான ஆட்டோ ஓட்டுனர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌‌ஷமிட்டனர்.

மேலும் செய்திகள்