சீர்காழி, ஒன்றியக்குழு தலைவர் பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி
சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் பதவி யாருக்கு? என்பதில் தி.மு.க.வினர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
திருவெண்காடு,
நாகை மாவட்டம் சீர்காழி ஒன்றியக்குழுவில் 21 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சீர்காழி ஒன்றியத்தில் தி.மு.க. 9 வார்டுகளையும், அ.தி.மு.க. 7 வார்டுகளையும் கைப்பற்றின. சுயேச்சைகள் 5 வார்டுகளில் வெற்றி பெற்றனர்.
வருகிற 11-ந் தேதி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் சீர்காழி ஒன்றியக்குழு தலைவர் பதவியை பிடிக்க தி.மு.க., அ.தி.மு.க.வினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 2 கட்சியினரும் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களின் ஆதரவை நாடி உள்ளனர்.
சுயேச்சைகள் சிலரை 2 கட்சியினரும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே தி.மு.க. ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மத்தியிலும் ஒன்றியக்குழு தலைவர் பதவி யாருக்கு என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
தி.மு.க. சார்பில் 19-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் நாகை வடக்கு மாவட்ட பொருளாளர் ஜி.என்.ரவியின் மனைவி மதுமிதா என்பவருக்கு ஒன்றியக்குழு தலைவர் பதவி வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் அந்த முடிவு மாற்றப்பட்டு 20-வது வார்டில் வெற்றி பெற்ற கமலஜோதி தேவேந்திரன் என்பவருக்கு பதவி வழங்கப்பட உள்ளதாகவும் கட்சியினரிடையே தகவல் பரவியது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாவட்ட பொருளாளர் ரவியின் ஆதரவாளர்கள், பல்வேறு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று காலை திருவெண்காட்டில் உள்ள தி.மு.க. தலைவர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட முயன்றனர்.
வீட்டை முற்றுகையிட திருவெண்காடு கீழவீதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட தி.மு.க.வினரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நாகை வடக்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஞானவேலன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டாக்டர் பன்னீர்செல்வம், அருள்செல்வன், சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர் சசிக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் துர்கா ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற கட்சியினருடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகிகள் உறுதி அளித்தனர். அதன்பேரில் அவர்கள் கலைந்து சென்றனர். ஒன்றியக்குழு தலைவர் பதவி யாருக்கு? என்பதில் ஏற்பட்ட போட்டி காரணமாக துர்கா ஸ்டாலின் வீட்டை தி.மு.க.வினர் முற்றுகையிட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.