கருவறையில் மூலவரை படம் பிடிக்க பணம் கைமாறியதா? விசாரணை நடத்த இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
ராமேசுவரம் கோவில் கருவறையில் மூலவரை படம்பிடிக்க பணம் கைமாறியதா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்த கோரிக்கை எழுந்துள்ளது.
ராமேசுவரம்,
முக்கிய புண்ணிய தலங்களில் ஒன்றாக ராமேசுவரம் ராமநாதசாமி கோவில் விளங்கி வருகிறது.பாதுகாப்பு கருதி கோவிலின் கருவறையில் உள்ள மூலவரை படம் பிடிக்கவோ,வீடியோ எடுக்கவோ கூடாது என்பது ஆகம விதியாகும். இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலின் கருவறையில் மூலவரை கோவில்குருக்கள் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து யாரோ ஒருவருக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது.
இது குறித்து கோவில் இணை ஆணையர் விசாரணை நடத்தியதுடன் கருவறையில் உள்ள மூலவரை செல்போனில் படம் பிடித்த விஜயகுமார் போகில் என்ற அர்ச்சகரை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
கருவறையில் மூலவரை அர்ச்சகர் எதற்காக படம் பிடித்தார்? இதில் பணம் கைமாறியதா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இது குறித்து இந்துமக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியதாவது:-
ராமேசுவரம் கோவிலின் கருவறையில் உள்ள மூலவரை செல்போனில் படம் பிடித்த அர்ச்சகர் மீது சட்டப்பூர்வமாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து புகார் மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். கருவறையில் உள்ள மூலவரை படம் பிடித்த அர்ச்சகரை காப்பாற்றும் நோக்கத்தில் சில அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். எனவே இதுதொடர்பாக காவல்துறை முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.