மத்திய அரசை கண்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட 690 பேர் கைது

நாகை மாவட்டம் மற்றும் காரைக்காலில் சாலைமறியலில் ஈடுபட்ட 690 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-01-08 22:15 GMT
நாகப்பட்டினம்,

மத்திய அரசின் மக்கள் விரோத மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து நேற்று அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் சார்பில் பொதுவேலைநிறுத்தம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகையில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்தம் மற்றும் சாலைமறியல் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட 530 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் நாஜிம், தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், ம.ம.க. உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் உள்பட 160 பேரை நகர போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறையில் தாலுகா அலுவலகம், உதவி கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய்த்துறை அலுவலகங்களில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாயினர். இதேபோல் மயிலாடுதுறை கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் அலுவலகத்தில் 95 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. இதனால் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன. மயிலாடுதுறை தலைமை தபால் அலுவலகத்தில் 50 சதவீத ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. அரசு போக்குவரத்து கழக பஸ்கள் வழக்கம்போல் இயங்கின.

மேலும் செய்திகள்