பொய் செய்திகளை உருவாக்கும் தொழிற்சாலை, பா.ஜனதா; சித்தராமையா கடும் விமர்சனம்

மத்திய அரசு கர்நாடகத்திற்கு ரூ.1,869 கோடி நிதி ஒதுக்கியதாக பா.ஜனதா கூறி வருகிறது. இதை மறுத்துள்ள முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, பா.ஜனதா பொய் செய்திகளை உருவாக்கும் தொழிற்சாலை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

Update: 2020-01-08 23:30 GMT
பெங்களூரு, 

கர்நாடகத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் ெபரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டன. சுமார் 100 பேர் மரணம் அடைந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்தனர். மத்திய அரசு முதல் கட்டமாக ரூ.1,200 கோடி நிதி ஒதுக்கியது. சுமார் 2 மாதத்திற்கு பிறகு 2-வது கட்டமாக ரூ.1,869 கோடி நிதியை ஒதுக்கியது. ஆகமொத்தம் இதுவரை ரூ.3,069 கோடி நிதி ஒதுக்கியுள்ளதாக கர்நாடக அரசு மற்றும் பா.ஜனதா தலைவர்கள் கூறினர்.

இதை மறுத்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான சித்தராமையா, பா.ஜனதா பொய்யான செய்திகளை உருவாக்கும் தொழிற்சாலை என்று கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கர்நாடக அரசு அதிகாரிகள் வழங்கியுள்ள தகவலின்படி வெள்ள நிவாரண பணிகளுக்கு மத்திய அரசு 2-வது கட்டமாக கர்நாடகத்திற்கு ரூ.669 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் மூடப்பட்டு வரும் சூழ்நிலையில், பா.ஜனதா பொய்யான செய்திகளை உருவாக்கும் தொழிற்சாலைபோல் செயல்பட்டு வருகிறது.

பா.ஜனதா தலைவர்கள் பொய் கடவுளின் பக்தர்கள். எடியூரப்பா வைத்த கோரிக்கை அடிப்படையில் பிரதமர் மோடி, கூடுதலாக ரூ.669.85 கோடி நிதி ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் இதுவரை மத்திய அரசு வெள்ள நிவாரண பணிகளுக்காக கர்நாடகத்திற்கு ரூ.1,869.85 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறது. ஆனால் பா.ஜனதா தலைவர்கள் மொத்தம் ரூ.3,069 கோடி ஒதுக்கி இருப்பதாக கூறுவது வேடிக்கையாக உள்ளது.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.

சித்தராமையாவின் இந்த கருத்துக்கு பதிலளித்துள்ள பா.ஜனதா தனது டுவிட்டரில், "சித்தராமையா அவர்களே, காங்கிரஸ் மற்றும் உங்களை போல் பொய் செய்தி தொழிற்சாலையை நடத்துவதில் நாங்கள் திறமையற்றவர்கள். அதனால் உங்களிடம் நாங்கள் சரண் அடைகிறோம். காந்தியை போல் நாங்கள் உண்மை பேசுவதில் நம்பிக்கை கொண்டவர்கள். கோபல்சை போல் நாங்கள் பொய்களை பரப்புவது அல்ல. நீங்கள் ஆட்சியில் இருந்தபோது கன்னடர்களுக்கு ‘பொய் பாக்கிய’ (பல திட்டங்களுக்கு பாக்கிய என்று பெயர் சூட்டப்பட்டது) இன்னும் நினைவில் உள்ளது’’ என்று தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்