மின்மோட்டாரை கழற்றிச்சென்ற பிறகும், மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறு
வேலூர் கலாஸ்பாளையத்தில் மின்மோட்டாரை கழற்றிச்சென்ற பிறகும் அதிகாரிகள், ஆழ்துளை கிணற்றை மூடாமல் ஆபத்தான நிலையில் அப்படியே விட்டு விட்டனர். அதனை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர்,
ஆழ்துளை கிணறுகளை மூடாமல் அப்படியே விட்டுவிடுவதால் அதில் குழந்தைகள் விழுந்து உயிர்ப்பலி ஏற்படுகிறது. இதனை தடுக்க பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்திலும், வேலூர் மாநகராட்சி பகுதிகளிலும் இதேபோன்று பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆனாலும் சில பகுதிகளில் ஆழ்துளை கிணறுகள் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன. வேலூர் மாநகராட்சி கலாஸ்பாளையம் பகுதியில் கோதண்டராமர் கோவில் தெரு உள்ளது. இங்குள்ள முத்துமாரியம்மன் கோவிலுக்கும், வீரபத்திரர் கோவிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக ஆழ்துளை கிணறு அமைத்து, அதில் மின்மோட்டார் பொருத்தி, தற்காலிக தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டுவந்தது.
இந்த நிலையில் மின்மோட்டார் பழுதானதால் மாநகராட்சி சார்பில் மின்மோட்டாரை கழற்றி சென்றனர். அதன் பிறகு பல வருடங்களாகியும் மின்மோட்டாரை சரி செய்து பொருத்தவில்லை. இதனால் தற்காலிக தொட்டியும் பழுதாகி அதையும் அங்கிருந்து அப்புறப்படுத்திவிட்டனர்.
ஆனால் ஆழ்துளை கிணற்றை மூடாமல் அதன்மீது ஒரு கல்லைமட்டும் வைத்துவிட்டு சென்றுள்ளனர். அதில் தண்ணீர் இருப்பதாக அந்தப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். சிறுவர்கள் அந்தப்பகுதிக்கு விளையாட சென்றால் ஆபத்து ஏற்படக்கூடிய நிலை உள்ளது.
எனவே ஆபத்து ஏற்படுவதற்கு முன்பு மின்மோட்டாரை பொருத்தி, விபத்தை தடுப்பதோடு, குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.