சிக்கமகளூருவில் பரபரப்பு; ஷோபா எம்.பி. வந்த கார் முன் போராட்டம்

சிக்கமகளூருவில், ஷோபா எம்.பி. வந்த கார் முன் போராட்டம் நடத்திய காங்கிரசார், அவருக்கு வெங்காய மாலை அணிவிக்க முயன்றதால் பரபரப்பு உண்டானது.

Update: 2020-01-07 23:00 GMT
சிக்கமகளூரு, 

கியாஸ் விலை உயர்வை கண்டித்து சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் முன்பு நேற்று காங்கிரஸ் சார்பில் பக்கோடா தயாரிக்கும் நூதன போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அம்சுமந்த் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் உள்பட ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த நிலையில் சிக்கமகளூரு மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் மத்திய அரசின் திட்டங்களை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது. அந்த கூட்டத்தில் கலந்து கொள்ள சிக்கமகளூரு-உடுப்பி தொகுதி பா.ஜனதா எம்.பி. ஷோபா காரில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலக வளாக பகுதியில் வந்து கொண்டு இருந்தார்.

இதனை பார்த்த காங்கிரஸ் கட்சியினர் விரைந்து சென்று ஷோபா எம்.பி.யின் காரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதையடுத்து அவர் போராட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக காரில் இருந்து இறங்கினார்.

இந்த நிலையில் காங்கிரஸ் தொண்டர்கள், ஷோபா எம்.பி.க்கு வெங்காய மாலையை அணிவிக்க முயன்றனர். அப்போது சுதாரித்து கொண்ட ஷோபா எம்.பி, வெங்காய மாலையை கீழே தட்டி விட்டார். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் காங்கிரஸ் கட்சியினரை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். 

இதனால் போலீசாருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஷோபா எம்.பி.யை போலீசார் பத்திரமாக அழைத்து சென்று மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்திற்குள் விட்டனர். அவர் அங்கு நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் சிறிது நேரத்தில் அங்கிருந்து கலைந்து சென்றனர். 

மேலும் செய்திகள்