கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1½ லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து - 19-ந் தேதி வழங்கப்படுகிறது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 1½ லட்சம் குழந்தைகளுக்கு வருகிற 19-ந்தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி,
5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வருகிற 19-ந் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரபாகர் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளம்பிள்ளைவாத நோயில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் பொருட்டு போலியோ சொட்டு மருந்து முகாம்கள் வருகிற 19-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. இதன் மூலம் 1 லட்சத்து 59 ஆயிரத்து 597 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. இந்த முகாம்கள் 10 ஒன்றியங்களில் 900 மையங்களிலும், 2 நகர் பகுதிகளில் 84 மையங்களிலும் என மொத்தம் 984 மையங்களில் நடைபெற உள்ளது.
இது மட்டுமல்லாமல் வேறு இடங்களில் இருந்து பணி மற்றும் வியாபாரம் நிமித்தமாக நமது மாவட்டத்தில் வந்து தங்கியுள்ள கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்கள், மேம்பால பணியாளர்கள், பொம்மை விற்பனையாளர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் ஆகியோருக்கும் நடமாடும் முகாம்கள் மூலமாக போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து மையங்களுக்கு வினியோகம் செய்வதற்காக பிற துறை வாகனங்கள் 37 மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களின் வாகனங்கள் 53 உள்பட 90 வாகனங்கள் தயார் நிலையில் உள்ளன. போலியோ சொட்டு மருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கிட சுகாதார துறை கல்வித்துறை, சமூக நலத்துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உள்பட 4 ஆயிரத்து 77 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போலியோ சொட்டு மருந்து மையங்களை மேற்பார்வையிட மண்டல குழு மற்றும் துறை சார்ந்த 27 அலுவலர்கள் முகாம்களை மேற்பார்வை செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போலியோ சொட்டு மருந்து அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு சத்துணவு மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையும் ரெயில் நிலையங்கள் பஸ் நிலையங்கள் மற்றும் சுங்கச்சாவடிகளில் இடைவிடாமல் வழங்கப்பட உள்ளது. எனவே 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து போட்டு இருந்தாலும் வருகிற 19-ந்தேதி மீண்டும் போலியோ சொட்டு மருந்தை போட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமமூர்த்தி, சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். கோவிந்தன், மற்றும் வட்டார மருத்துவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.