பெங்களூருவில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை; மாநகர போலீஸ் கமிஷனர் பேட்டி
நாளை (புதன்கிழமை) முழு அடைப்பையொட்டி பெங்களூருவில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை என்று மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நாடு முழுவதும் வருகிற 8-ந் தேதி (அதாவது நாளை) முழு அடைப்புக்கு பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. ஆனால் பெங்களூரு நகரில் முழு அடைப்பு நடைபெறுவது பற்றி போலீசாருக்கு எந்த தகவலும் வரவில்லை. முழு அடைப்பையொட்டி ஊர்வலம் நடத்த சில அமைப்புகள் அனுமதி கேட்டு இருந்தனர். அந்த அமைப்புகளுக்கு ஊர்வலம் நடத்த அனுமதி கொடுக்கவில்லை. முழு அடைப்பு மற்றும் ஊர்வலத்தால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். அதனால் பெங்களூருவில் ஊர்வலம் நடத்த அனுமதி இல்லை.
பெங்களூருவில் 8-ந் தேதி ஊர்வலம், பேரணி நடத்த அனுமதி அளிக்க கூடாது என்று போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். இப்படிபட்ட சூழ்நிலையில் ஊர்வலம் நடத்த அனுமதித்தால் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பரிதவிக்கும் நிலை ஏற்படும். சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்துவதற்கு முழு அனுமதி வழங்கப்படும்.
முறையான அனுமதியில்லாமல் பெங்களூருவில் ஊர்வலம், பேரணி நடத்தினால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊர்வலத்தை தலைமை தாங்கி நடத்துபவர்கள் மீது சட்டப்பிரிவு 107-ன்படி வழக்குப்பதிவு செய்யப்படும். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஊர்வலத்தின் போது ஏதாவது சிறிய அசம்பாவிதம் ஏற்பட்டாலும், அந்த ஊர்வலத்திற்கு தலைமை ஏற்று நடத்துபவர்கள் தான் பொறுப்பு என்று கூறி இருக்கிறது. அதனால் அனுமதி இல்லாமல் ஊர்வலம் நடத்துபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
முழு அடைப்பின் பெயரில் ஊர்வலம் நடத்தி பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்க அனுமதிக்க மாட்டோம். சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கும் பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. தொழிலாளர் சங்கங்கள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருப்பதால் பெங்களூருவில் முன் எச்சரிக்கையாக பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும்.
இவ்வாறு பாஸ்கர்ராவ் கூறினார்.