வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு : ‘கோவிந்தா’ கோ‌‌ஷமிட்டு பக்தர்கள் தரிசனம்

வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா... என கோ‌‌ஷமிட்டு சாமியை தரிசனம் செய்தனர்.

Update: 2020-01-06 22:30 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூரில் உள்ள பஞ்சப்பாண்டவருக்கு தனிசன்னதி கொண்ட மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலுக்கு புதிதாக 5 நிலை ராஜகோபுரம் மற்றும் சொர்க்கவாசல் கடந்த 2013-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகுண்ட ஏகாதசி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் உற்சவ பெருமாளுக்கு நாச்சியார் திருக்கோலத்துடன், மோகினி அலங்காரம் செய்யப்பட்டு திவ்யரூப தரிசனத்துடன் சிறப்பு ஆராதனை நடந்தது. வைகுண்ட ஏகாதசி விழாவின் சிகர நிகழ்ச்சியான பரமபத வாசல் எனும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்து.

இதனை முன்னிட்டு நேற்று காலை 6 மணிக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட உற்சவ பெருமாள் சொர்க்க வாசல் வழியாக வந்தார். அப்போது சொர்க்க வாசல் முன்பு கூடியிருந்த திரளான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா... என கோ‌‌ஷமிட்டு பெருமாளை தரிசனம் செய்தனர். பின்னர் உற்சவ பெருமாள் சன்னதி தெருவிற்கு வந்து, கோவில் எதிரே உள்ள கம்பம் ஆஞ்சநேயரை 3 முறை வலம் வந்து ஆண்டாள் சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து சொர்க்க வாசல் வழியாக பக்தர்களும் வந்தனர்.

சொர்க்க வாசல் திறப்பையொட்டி கம்பம் ஆஞ்சநேருக்கு சந்தனக்காப்பு அலங்காரமும், கோவில் வளாகத்தில் மலர் அலங்கார வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது. சொர்க்கவாசல் திறப்பு விழாவில் கல்வியாளர்கள் ஸ்ரீ ராமகிரு‌‌ஷ்ணா சிவசுப்ரமணியன், விவேகானந்தன், அன்னை பருவதம்மா கணேசன், கோவில் நிர்வாக அதிகாரி மணி, கோவில் திருப்பணிக்குழு துணை தலைவர் மெடிக்கல் ராமலிங்கம், முன்னாள் அறங்காவலர்கள் பூக்கடை சரவணன், வைத்தீஸ்வரன், வள்ளி ராஜேந்திரன், ஆடிப்பெருக்குவிழா ஆஞ்சநேயர் ஊர்வல கமிட்டி தலைவர் கீற்றுக்கடை குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். சொர்க்க வாசல் திறந்த பின்பு பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, மூலவர் பெருமாள் மற்றும் உற்சவ பெருமாளையும், பின்பு மரகதவல்லி தாயாரையும் தரிசனம் செய்தனர். இரவு வெள்ளி கருடவாகனத்தில் வாணவேடிக்கை, மேள தாளம் முழங்க சுவாமி வீதிஉலா நடந்தது.

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டியை அடுத்துள்ள குருவாலப்பர் கோவில் கிராமத்தில் உள்ள மரகதவல்லி தாயார் சமேத வீரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணியளவில் திருப்பள்ளியெழுச்சியும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது. அதை தொடர்ந்து காலை 6.15 மணியளவில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற கோ‌‌ஷத்துடன் பெருமாளை வணங்கினர். கோவில் உள் பிரகாரத்தில் வீரநாராயண பெருமாள் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் நெல்லித்தோப்பு கிராமத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாள் கோவில், சம்போடை கிராம சொர்க்க பள்ளத்தில் உள்ள வீரநாராயண பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் நேற்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சிலம்பரசன் மற்றும் அரசு அலுவலர்கள் செய்திருந்தனர். சொர்க்கவாசல் திறப்பையொட்டி கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இதேபோல் அரியலூர் பெருமாள் கோவிலில் நேற்று காலை சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

மேலும் செய்திகள்