ராசிபுரம், பள்ளிபாளையம், எலச்சிபாளையத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா - அமைச்சர்கள் பங்கேற்பு

ராசிபுரம், பள்ளிபாளையம், எலச்சிபாளையம் ஆகிய பகுதிகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.

Update: 2020-01-06 22:30 GMT
ராசிபுரம், 

ராசிபுரத்தில் உள்ள நித்திய சுமங்கலி மாரியம்மன் திடலில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். நாமக்கல் எம்.பி. சின்ராஜ், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கித்தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் வக்கீல் தாமோதரன், காக்காவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தலைவர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்துகொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர்.

இதையடுத்து அமைச்சர் தங்கமணி பேசுகையில், பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக ரூ.1,000, 1 கிலோ பச்சரிசி, கரும்பு உள்பட பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. 9-ந் தேதி முதல் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் வழங்கப்படும். எங்களைப் பொறுத்தவரையில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறோம். மாவட்டத்தில் 2 கல்லூரிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன. ராசிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்த உடன் தார்சாலைகள் போடப்படும்.

ராசிபுரம் தொகுதியில் ரூ.900 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள் நடந்து வருகிறது என்றார். இதையடுத்து அமைச்சர் சரோஜா பேசுகையில், 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதையொட்டி கிராமந்தோறும் சென்று மக்களை சந்தித்து மனுக்கள் பெற்று 30 நாட்களுக்குள் முதியோர் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ராசிபுரம் நகராட்சி தன்னிறைவு பெற்ற நகராட்சியாக விளங்க நடவடிக்கை எடுக்கப்படும். ராசிபுரத்தில் பெண்களுக்கு என்று தனியாக ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் யோகா, உடற்பயிற்சி செய்வதற்கு அம்மா பூங்கா கொண்டு வரப்படும். பேரூராட்சிகள், ராசிபுரம் நகராட்சி மக்கள் பயன்பெறும் வகையில் ராசிபுரத்திற்கு தனி குடிநீர் திட்டம் கொண்டு வரப்படும் என்றார்.

இதில் ராசிபுரம் வீட்டு வசதி சங்கத்தலைவர் கோபால், மசக்காளிப்பட்டி கூட்டுறவு சங்கத்தலைவர் பிரகாசம், அத்தனூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ராமதாஸ், ராசிபுரம் நகராட்சி முன்னாள் கவுன்சிலர்கள் சீரங்கன், சீனிவாசன், ஸ்ரீதர், ஜெகன், அருணாசலம், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் ராதா சந்திரசேகர், வெண்ணந்தூர் முன்னாள் சேர்மன் சரோஜினி, சூப்பர்பட்டு சொசைட்டி இயக்குனர் செல்வம், குமார் மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல பள்ளிபாளையத்திலும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கினர். இதில் கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் பாலமுருகன், மாவட்ட வருவாய் அலுவலர் துர்கா மூர்த்தி, பள்ளிபாளையம் நகரமன்ற முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, துணைத்தலைவர் சுப்ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். எலச்சிபாளையத்திலும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா கலந்து கொண்டு வழங்கினர். இதில் டி.சி.எம்.எஸ். மேலாண்மை இணைப்பதிவாளர் ரவிக்குமார், சரக பதிவாளர் வெங்கடாசலம், பொது வினியோக திட்ட துணைத்தலைவர் முருகேசன் உள்பட கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்