வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்: திண்டிவனம், விக்கிரவாண்டியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு
விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நேற்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நடந்தது. இதில் திண்டிவனம், விக்கிரவாண்டியில் தேர்தல் பார்வையாளர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி,
விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 1.1.2020-ஐ தகுதி நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி, வருகிற 22-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க மற்றும் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் கொடுத்து வருகின்றனர்.
இதனிடையே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்காக மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒருங்கிணைந்த மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 304 வாக்குச்சாவடி மையங்களிலும், மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 265 வாக்குச்சாவடி மையங்களிலும், திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 264 வாக்குச்சாவடிகளிலும், வானூர் (தனி) தொகுதிக்குட்பட்ட 277 வாக்குச்சாவடிகளிலும், விழுப்புரம் தொகுதிக்குட்பட்ட 284 வாக்குச்சாவடிகளிலும், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட 275 வாக்குச்சாவடிகளிலும், திருக்கோவிலூர் தொகுதிக்குட்பட்ட 286 வாக்குச்சாவடிகளிலும், உளுந்தூர்பேட்டை தொகுதிக்குட்பட்ட 337 வாக்குச்சாவடிகளிலும், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட 305 வாக்குச்சாவடிகளிலும், சங்கராபுரம் தொகுதிக்குட்பட்ட 300 வாக்குச்சாவடிகளிலும், கள்ளக்குறிச்சி (தனி) தொகுதிக்குட்பட்ட 330 வாக்குச்சாவடிகளிலும் ஆக மொத்தம் 3,227 வாக்குச்சாவடி மையங்களில் ஜனவரி 4, 5 மற்றும் 11, 12 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று முன்தினம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடந்தது.
2-ம் நாளான நேற்றும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு தொடங்கி மாலை 5.30 மணி வரை நடைபெற்ற இந்த முகாம்களில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகள் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் கோரிக்கை மனுக்களை அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் கொடுத்தனர்.
விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் நேற்று நடந்த சிறப்பு முகாமை சிறப்பு தேர்தல் பார்வையாளர் சிவசண்முகராஜா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், அங்கு பணியில் இருந்த வாக்குச்சாவடி அலுவலர்களிடம், வாக்காளர் பெயர் சேர்த்தலுக்கான படிவங்கள் உள்ளதா எனவும், பெயர் சேர்த்தல், நீக்கம், செய்தல் முகவரி மாற்றம் குறித்த விண்ணப்பங்கள் எத்தனை பெறப்பட்டுள்ளது என்றும் கேட்டறிந்தார். அப்போது மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், தாசில்தார் பார்த்தீபன், மக்கள் தொடர்பு அலுவலர் சுப்பையா, வருவாய் ஆய்வாளர் விஜயன், கிராம நிர்வாக அலுவலர் முருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக சிறப்பு தேர்தல் பார்வையாளர் சிவசண்முகராஜா, கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் திண்டிவனம் புனித அன்னாள் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடந்த சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தேர்தல் பார்வையாளர் சிவ சண்முகராஜா தொடங்கி வைத்தார்.