கார்களை வாடகைக்கு எடுத்து மோசடி: நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகை

கார்களை வாடகைக்கு எடுத்து மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டது.

Update: 2020-01-04 22:00 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி மற்றும் அதன் சுற்று புறங்களில் உள்ள வாடகை வாகன டிரைவர்களிடம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பொன்னேரியை சேர்ந்த கிருபாகரன் மற்றும் அவரது நண்பர் காண்டிபன் ஆகியோர் சினிமா படப்பிடிப்பிற்காக சுமார் 70-க்கும் மேற்பட்ட கார்களை வாடகைக்கு எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதற்காக சிலர் தரகர்களாகவும் செயல்பட்டு உள்ளனர். இதில் வாடகை கார்கள் மட்டுமன்றி சிலர் தங்களது சொந்த தேவைக்காக வைத்திருந்த கார்களையும் வாடகைக்கு அனுப்பி வைத்து உள்ளனர். இவ்வாறு சினிமா படப்பிடிப்பிற்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் கார்களுக்கு மாதம் ரூ.30 ஆயிரம் வாடகை தருவதாக ஆசை காட்டிய அந்த நபர்கள் முதலில் முன்பணமாக ரூ.30 ஆயிரத்தையும், அதன் பின்னர் 2 மாதங்கள் மட்டும் வாடகை பணத்தையும் கொடுத்து உள்ளதாக தெரிகிறது.

அதன் பின்னர் எடுத்து சென்ற கார்களுக்கு வாடகை எதுவும் தரவில்லை என்றும் கார்களை தங்களுக்கு இதுவரை செலுத்தாத அவர்கள் அவற்றை தவறான செயல்களுக்கு பயன்படுத்துகிறார்களா? அல்லது அவற்றின் விலைக்கு ஏற்ப அடமானம் வைத்து பணம் பெற்று உள்ளனரா? என்கிற சந்தேகமும் எழுவதாக பாதிக்கப்பட்டவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் தனித்தனியாக புகார்களை அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் தொடங்கப்பட்டது.

அந்த கார்கள் இருக்கும் இடங்களை போலீசார் கண்டறிந்தும், சம்பந்தப்பட்ட நபர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து பேசிய பிறகும், பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அவர்களது கார்களை இது நாள் வரை போலீசார் மீட்டு தரவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்களை ஏமாற்றி வாடகைக்கு கார்களை பெற்றுச்சென்ற நபர்கள் மற்றும் அதற்கு தரகர்களாக இருந்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து தங்களது கார்களை மீட்டு தர வேண்டும் என வலியுறுத்தி கும்மிடிப்பூண்டியில் உள்ள வாடகை வாகன டிரைவர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் கார்களை வாடகைக்கு அனுப்பி வைத்தவர்கள் என அனைவரும் ஒன்று கூடி நேற்று கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

பின்னர் தங்களது கோரிக்கை தொடர்பாக போலீஸ் நிலையத்தில் மீ்ண்டும் ஒரு புகார் மனு அளித்து விட்டு அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்