இந்திய வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் மீது பாசம் ஏன்? குமாரசாமி கேள்வி

இந்திய வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மீது பாசம் ஏன்? என்று குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-01-03 23:00 GMT
பெங்களூரு,

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடகத்தில் பா.ஜனதா வேட்பாளர்கள் 25 பேரை வெற்றி பெற வைத்தனர். கர்நாடகத்தில் கடந்த ஆண்டு பெரிய அளவில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் உண்டாயின. ரூ.35 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இதற்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை. கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு பாக்கி வைத்துள்ளது.

வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கவில்லை. இதுபற்றி பேசாமல் மவுனம் காக்கும் பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் மீது ஏன் இவ்வளவு பாசம்?. பாகிஸ்தான் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு கர்நாடகத்திற்கு வழங்க வேண்டிய நிதியை பிரதமர் உடனே ஒதுக்க வேண்டும்.

கர்நாடகத்தில் வசூலாகும் வரியில் பங்கு மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கான நிதியை பாகிஸ்தானிடம் கேட்க வேண்டுமா? அல்லது இந்திய வாக்காளர்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களிடம் கேட்க வேண்டுமா?. குடியுரிமை திருத்த சட்ட விஷயத்தில் அடிக்கடி பாகிஸ்தான் பெயரை பயன்படுத்தும் மோடி, பாகிஸ்தான் பிரதமரா? அல்லது இந்திய பிரதமரா?. இந்திய வாக்காளர்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா? அல்லது பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் வாக்களித்தார்களா?.

இந்திய வாக்காளர்களின் ஓட்டுகளை பெற்று பிரதமராகியுள்ள நீங்கள் (மோடி) மாநிலங்களின் வளர்ச்சி முக்கியமா? அல்லது பாகிஸ்தானியர்களுக்கு குடியுரிமை வழங்குவது முக்கியமா?. துமகூரு சித்தகங்கா மடத்தில் சிவக்குமார சுவாமியின் சமாதியில் மரியாதை செலுத்திய நீங்கள், மாணவர்களின் எதிர்கால நலன் குறித்து ஏதாவது ஆலோசனை வழங்கினீர்களா?. இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்