மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வலியுறுத்தி, வேட்பாளர் தீக்குளிக்க முயற்சி - மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு
மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வலியுறுத்தி வேட்பாளர் தீக்குளிக்க முயன்றார். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னம்,
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல உசேன் கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து(வயது 45), இதேபோல் தொண்டப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல்(36). இவர்கள் 2 பேரும் அல்லிநகரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்.
இதில் பாடாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் முடிவில், அல்லிநகரம் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட மருதமுத்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதை அறிந்த பழனிவேல் நேற்று தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அவரது ஆதரவாளர்கள் அவரை தடுத்து நிறுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் பழனிவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், வாக்கு எண்ணிக்கையில் அதிகாரிகள் குளறுபடி செய்துள்ளதாகவும், மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியும் பெரம்பலூர்- அரியலூர் சாலையில், குன்னம் அருகே உள்ள அல்லிநகரம் பகுதியில் படுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த குன்னம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, இதுகுறித்து ஆலத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முறையிடுமாறு போலீசார் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பெரம்பலூர்- அரியலூர் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று ஆலத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.