மாமல்லபுரம் விடுதிகளில் ஆடல், பாடலுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

மாமல்லபுரம் விடுதிகளில் ஆடல், பாடலுடன் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

Update: 2020-01-01 22:15 GMT
மாமல்லபுரம், 

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள விடுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் புத்தாண்டை வரவேற்று மது விருந்துடன் கூடிய ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன. ஆண்களுக்கு நிகராக பெண்களும் கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மது குடித்து போதையில் ஆடிபாடி மகிழ்ந்தனர். மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் சுற்றுலா வளர்ச்சி கழக ஓட்டலில் நடந்த புத்தாண்டு கேளிக்கை நிகழ்ச்சியில் திரளான சுற்றுலா பயணிகள்் புத்தாண்டை வரவேற்று அங்குள்ள கடற்கரையில் திறந்தவெளி மேடையில் இளம் பெண்கள், சிறுவர்கள் நடனமாடி மகிழ்ந்தனர்.

புத்தாண்டு பிறந்தவுடன் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்றனர். சுற்றுலா வளர்ச்சிக்கழக ஓட்டலின் பின்புறம் கடலில் குளிக்க பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. தனியார் நட்சத்திர ஓட்டல்கள், பண்ணை வீடுகள், விடுதிகளில் ஆட்டம், பாட்டத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டியது. புத்தாண்டை வரவேற்று அனைத்து விடுதிகள், ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் வண்ண விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் பல்லவன் சிலை அருகில் காவல் சோதனை சாவடி அமைத்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையில், மாமல்லபுரம் சரக உதவி கண்காணிப்பாளர் சுந்தரவதனம், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீசார் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரத்தில் இருந்து முட்டுக்காடு வரை தீவிர பாதுகாப்பு பணியிலும், தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டனர்.

விடுதிகளில் அறைகள் பதிவு செய்யப்பட்டு அனுமதி அட்டை உள்ளவர்களின் கார் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் மாமல்லபுரம் நகருக்குள் செல்ல போலீசார் அனுமதித்தனர். சென்னை புறநகர் பகுதியில் இருந்து போதையில் கார், மோட்டார் சைக்களில் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இவர்கள் மாமல்லபுரம் செல்ல அனுமதிக்கப்படவில்லை. குறிப்பாக கார்களின் ஆண் நண்பர்களுடன் வந்த பெண்கள் பலரும் மது குடித்து இருந்தனர். அவர்களுக்கு போலீசார் அறிவுரை கூறி அனுப்பினர்.

புத்தாண்டு பிறந்தவுடன் நட்சத்திர ஓட்டல்களில் வண்ண நிறத்தில் வெடிகள் வெடித்து புத்தாண்டை கொண்டாடினர்.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலை, பல்லவன் சிலை அருகில் உள்ள சோதனை சாவடியில், மாமல்லபுரம் சரக உதவி கண்காணிப்பாளா சுந்தரவதனம், மாமல்லபுரம் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் முன்னிலையில், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் புது ஆண்டு பிறந்தவுடன் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருடன் கேக் வெட்டி புத்தாண்டை வரவேற்று கொண்டாடி மகிழ்ந்தார். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கும், கார்களில் குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார்.

குடிபோதையில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை மடக்கி செங்கல்பட்டு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை கூறி திருப்பி அனுப்பினார். இ.சி.ஆர். சாலையில் அதிகபடியான விபத்தும், குற்றசம்பவங்களும் இல்லாமல் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளதாக மாமல்லபுரம் காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்