மணிமுத்தாறு அணையில் படகு சவாரி தொடங்கியது - சுற்றுலா பயணிகள் ஆனந்தம்
மணிமுத்தாறு அணையில் நேற்று படகு சவாரி தொடங்கியது. சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக படகு சவாரி செய்தனர்.
விக்கிரமசிங்கபுரம்,
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று மணிமுத்தாறு அருவி மற்றும் அணை ஆகும். இங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில் மணிமுத்தாறு அருவிக்கு செல்லும் வழியில் சாலைப்பணிகள் நடந்து வருவதால் கடந்த 8 மாதங்களாக சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதே நேரத்தில், வனத்துறை சார்பில் மணிமுத்தாறு அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில், ஓய்வுப்பூங்கா, படகு சவாரி உள்ளிட்டவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது.
இதற்காக சுமார் ரூ.80 லட்சம் மதிப்பில் சூரியமின் ஒளியில் இயங்கும் படகு ஒன்று வாங்கப்பட்டது. அந்த படகு சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து அதன் சேவை தொடங்கியது. நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் படகில் ஆனந்தமாக பயணம் செய்தனர்.
இந்த படகு சவாரிக்கு பெரியவர்களுக்கு ரூ.110-ம், 12 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு ரூ.55-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அம்பை புலிகள் காப்பக துணை இயக்குனர் கொம்மு ஓம்காரம் கூறுகையில், ‘சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்யும்போது, உயிர் காக்கும் கவசம் அணிந்து கொள்ள வேண்டும். மேலும் செல்போனில் படம் எடுப்பது, தண்ணீரில் கை வைத்து விளையாடுவது, எழுந்து நிற்பது உள்ளிட்டவற்றை செய்யக்கூடாது. மதுபோதையில் வருபவர்கள், படகு சவாரி செய்ய அனுமதி கிடையாது‘ என்றார்.