திசையன்விளையில் சாலையோரம் கொட்டப்பட்ட கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு - உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை
திசையன்விளையில் சாலையோரம் கொட்டப்பட்ட கோழி கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த கோழி கழிவுகளை உடனே அகற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திசையன்விளை,
திசையன்விளை தீயணைப்பு நிலையத்திற்கு அருகே உள்ள பாலத்தை அடுத்த சாலை ஓரங்களில் கேரள மாநிலத்தில் இருந்து லாரிகளில் கொண்டு வரப்படும் கோழி கழிவுகளை மர்மநபர்கள் இரவு நேரங்களில் மூட்டை, மூட்டையாக கொட்டி செல்கின்றனர்.
இதனால் சாலை ஓரங்களில் கோழி கழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதன் காரணமாக அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் முக கவசம் அணிந்தவாறு செல்கின்றனர்.
மேலும் அந்த பகுதியை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே திசையன்விளை நகர பஞ்சாயத்து அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து கோழி கழிவுகளை உடனே அகற்ற வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.