புத்தாண்டு கொண்டாட்டத்தில்,குடிபோதையில் தகராறு: மருத்துவ கல்லூரி மாணவருக்கு கத்திக்குத்து போலீசார் விசாரணை

ஹாசன் டவுனில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மருத்துவ கல்லூரி மாணவரை, சக மாணவர் கத்தியால் குத்தினார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2020-01-01 22:15 GMT
ஹாசன்,

ஹாசன் டவுனில் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் சிவமொக்கா மாவட்டத்தை சேர்ந்த மாருதி, மண்டியா மாவட்டம் பாண்டவபுராவை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆகியோர் இறுதி ஆண்டு படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டையொட்டி மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதியில் மதுவிருந்து கொண்டாடியதாக ெதரிகிறது. அப்போது குடிபோதையில் மாருதிக்கும், ஸ்ரீகாந்துக்கும் இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றி கைகலப்பானது. இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.

கத்திக்குத்து

அப்போது ஆத்திரம் அடைந்த ஸ்ரீகாந்த் விடுதியின் சமையல் அறைக்கு சென்று ஒரு கத்தியை எடுத்து மாருதியை சரமாரியாக குத்தினார். இதில் பலத்த கத்திக்குத்து காயம் அடைந்த அவர் ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாருதியின் நண்பர்கள், ஸ்ரீகாந்த்தை பிடித்து சரமாரியாக அடித்து, உதைத்தனர். இதில் அவரும் பலத்த காயம் அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஹாசன் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாருதி, ஸ்ரீகாந்்த்தை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். கத்திக்குத்து காயம் அடைந்த மாருதிக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்து உள்ளனர்.

ஆனாலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். ஸ்ரீகாந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விசாரணை

இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் மாருதியை, ஸ்ரீகாந்த் கத்தியால் குத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து ஹாசன் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்