முதல்-மந்திரி பற்றி அவதூறு கருத்து: அரசு அதிகாரி மீது சிவசேனா பெண் தொண்டர்கள் மை ஊற்றி தாக்குதல்
முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பற்றி பேஸ்புக்கில் அவதூறு கருத்து பதிவிட்ட அரசு அதிகாரி மீது மை ஊற்றி சிவசேனா பெண் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
மும்பை,
பீட் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் சுனில் குல்கர்ணி. இவர் சிவசேனா தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரே குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் ‘எதற்கும் உதவாதவர்' என அவதூறாக கருத்து பதிவிட்டு உள்ளார்.
மேலும் ஆட்சி அதிகாரத்துக்காக இந்துத்வா கொள்கையை விற்று விட்டார் என்றும் குறிப்பிட்டு இருந்தார். இதைபார்த்து சிவசேனாவினர் ஆத்திரம் அடைந்தனர். நேற்றுமுன்தினம் சிவசேனா பெண் தொண்டர்கள் சிலர், மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்துக்கு சென்று உத்தவ் தாக்கரே குறித்து அவதூறு கருத்து பதிவிட்ட அதிகாரி சுனில் குல்கர்ணியை பிடித்து வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர் அவர்கள் ஒரு பாட்டீலில் தாங்கள் கொண்டு வந்த கருப்பு மையை அவர் மீது ஊற்றி தாக்குதல் நடத்தினார்கள். பொது இடத்தில் நடந்த இந்த தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தவ் தாக்கரேயை பேஸ்புக்கில் விமர்சித்த அரசு அதிகாரி மீது சிவசேனா பெண் தொண்டர்கள் மையை ஊற்றி தாக்குதல் நடத்திய இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
இருப்பினும் தன் மீதான இந்த தாக்குதல் குறித்து சுனில் குல்கர்ணி போலீசில் புகார் கொடுக்கவில்லை.
கடந்த வாரம் உத்தவ் தாக்கரேயை விமர்சித்து பேஸ்புக்கில் கருத்து பதிவிட்ட மும்பையை சேர்ந்த ஒருவரை சிவசேனா தொண்டர்கள் மொட்டை அடித்து தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.