கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்ற தபால் ஊழியர்கள் 4 பேர் கைது

கடத்தல்காரர்கள் வெளிநாடுகளில் இருந்து பார்சல்களில் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்களை திருடி விற்பனை செய்து வந்த தபால் ஊழியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-12-31 00:17 GMT
பெங்களூரு,

பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக 4 பேரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் நாகவாராவை சேர்ந்த விஜயராஜன்(வயது 58), தேவரசிக்கனஹள்ளியை சேர்ந்த ரமேஷ்குமார்(47), ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த சுப்பு(34), ஆர்.டி.நகரை சேர்ந்த மஜீத் அகமது(54) ஆகியோர் என்பது தெரிந்தது. இவர்கள் 4 பேரும் தபால் ஊழியர்கள் ஆவார்கள். சாம்ராஜ்பேட்டையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பார்சல்களை சரிபார்த்து வினியோகிக்கும் வேலையில் ஈடுபட்டு இருந்தனர்.

வெளிநாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு போலி முகவரிக்கு கடத்தல்காரர்கள் அனுப்பி வைக்கும் போதைப்பொருட்கள் இருக்கும் பார்சல்களை அடையாளம் கண்டு, அதில் இருக்கும் போதைப்பொருட்களை திருடி விற்பனை செய்வதை 4 பேரும் தொழிலாக வைத்திருந்தனர். போதைப்பொருட்கள் விற்பனை செய்யும் கும்பல்களுடனும் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் போதைப்பொருட்களை வழங்கி வந்ததும் தெரியவந்தது.

குறிப்பாக போதைப்பொருட்கள் விற்கும் கும்பல்களுக்கு நெதர்லாந்து, டென்மார்க், அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து பெங்களூருவுக்கு பார்சல்கள் மூலமாக போதைப்பொருட்கள் வருவது பற்றி தபால் நிலைய உயர் அதிகாரிகளுக்கு தகவல் எதுவும் தெரிவிக்காமல், அந்த போதைப்பொருட்களை தாங்களே திருடி விற்று 4 பேரும் பணம் சம்பாதித்து வந்துள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு 4 பேரும் போதைப்பொருட்களை விற்று வந்ததாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். கைதான 4 பேரிடமும் இருந்து 339 போதை மாத்திரைகள், 10 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருள், 30 கிராம் பிரவுன் சுகர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். கைதான 4 பேர் மீதும் கே.ஜி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்