திண்டுக்கல்லில், ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த 4 பேர் கைது - 70 பவுன் நகைகள்-கார் பறிமுதல்
திண்டுக்கல்லில் ஆளில்லாத வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 70 பவுன் நகைகள், கார் மற்றும் மோட்டார்சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் எம்.வி.எம்.நகரை சேர்ந்தவர் மணிவாசகம். இவர் மதுரையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றுகிறார். இவருடைய மனைவி சுதா. அரசு பள்ளி ஆசிரியை. கடந்த 13-ந்தேதி காலை கணவன், மனைவி 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு,வழக்கம் போல் வேலைக்கு சென்றனர். அவர்களின் மகன், மகள் ஆகியோர் பள்ளிக்கு சென்றனர்.
பின்னர் மாலையில் அவர்கள் திரும்பி வந்த போது பூட்டை உடைத்து, வீட்டில் இருந்த 20 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. இதுகுறித்து திண்டுக்கல் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே திண்டுக்கல்லை அடுத்த சென்னமநாயக்கன்பட்டியில் ராமநாதன் என்பவர் வீட்டில் 12 பவுன் நகைகளும், விக்னேஸ்நகரில் சவுந்தரராஜ் என்பவர் வீட்டில் 40 பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டன.
பட்டப்பகலில் இந்த 3 வீடுகளிலும் ஒரே மாதிரியாக ஆளில்லாததை நோட்ட மிட்டு கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது. எனவே, ஒரே கும்பலின் கைவரிசையாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து திண்டுக்கல் நகர் குற்றத்தடுப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் வீரபாண்டி, நல்லதம்பி, ஏட்டுகள் ஜார்ஜ், கார்த்திக் ஆகியோரை கொண்ட தனிப்படையினர் விசாரணையில் இறங்கினர்.
இதில் 3 பகுதிகளிலும் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு தனிப்படையினர் விசாரித்தனர். அப்போது 3 பகுதிகளிலும் கொள்ளை நடந்த நாளில் ஒரு கார் கடந்து செல்வது பதிவாகி இருந்தது. மேலும் அந்த கார், திண்டுக்கல் நகரில் சுற்றித்திரிவதையும் போலீசார் கண்டுபிடித்தனர்.
இதைத் தொடர்ந்து அந்த காரை மடக்கி, அதில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், திருப்பூரை அடுத்த குன்னத்தூரை சேர்ந்த இம்ரான் (வயது 31), திருப்பூர் பெரியகடைவீதியை சேர்ந்த அபுதாகிர் (32), திண்டுக்கல் கோவிந்தாபுரத்தை சேர்ந்த சதாம் உசேன் (29), சாகுல்அமீது (39) என்பது தெரியவந்தது.
மேலும் இவர்கள் 4 பேரும் திண்டுக்கல் எம்.வி.எம்.நகர், சென்னமநாயக்கன்பட்டி, விக்னேஷ்நகர் பகுதிகளில் 3 வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 70 பவுன் நகைகள், ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.