திண்டுக்கல் அருகே, ஆற்றில் மூழ்கி மாணவர் பலி
திண்டுக்கல் அருகே ஆற்றில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் பரிதாபமாக இறந்துபோனார்.
குள்ளனம்பட்டி,
அரியலூர் மாவட்டம் பூண்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 47). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஜூலியட் நிர்மலா (44). இவர்களுக்கு போவாஸ் (16) என்ற மகனும், எஸ்தர் (15) என்ற மகளும் உள்ளனர். இதில் போவாஸ் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்தநிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு கண்ணதாசன் தனது குடும்பத்துடன் திண்டுக்கல் அருகே முள்ளிப்பாடியில் உள்ள ஜூலியட் நிர்மலாவின் பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போவாஸ் குளிப்பதற்காக முள்ளிப்பாடியில் உள்ள சந்தன வர்த்தினி ஆற்றிற்கு சென்றார். அங்கு குளித்து கொண்டிருந்த போவாஸ் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. மேலும் அவருக்கு நீச்சல் தெரியாததால் ஆற்றில் மூழ்கினார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் போவாசை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு போவாசை டாக்டர்கள் பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்தது.
இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.