குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே, சாலையோர தேயிலை தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டுயானைகள் - தொழிலாளர்கள் பீதி

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே சாலையோர தேயிலை தோட்டத்தில் காட்டுயானைகள் முகாமிட்டுள்ளன. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2019-12-30 22:00 GMT
குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதன் காரணமாக தேயிலை தோட்டங்கள், வனப்பகுதிகள் பசுமையாக காட்சியளிக்கின்றன. குறிப்பாக குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் இருபுறமும் தேயிலை தோட்டங்கள் மற்றும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டுயானைகள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தேயிலை தோட்டங்கள் மற்றும் வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளதால், சமவெளி பகுதிகளில் இருந்து காட்டுயானைகள் வருகை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் கோவை மாவட்டம் காரமடை வனப்பகுதியில் குட்டியுடன் 7 காட்டுயானைகள் முகாமிட்டு இருந்தன. அந்த காட்டுயானைகள், மரப்பாலம் அருகே வடுகன் தோட்டம் என்ற இடத்தில் உள்ள குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையோர தேயிலை தோட்டத்துக்கு இடம்பெயர்ந்து வந்து உள்ளன. அங்கு முகாமிட்டுள்ள காட்டுயானைகள், அவ்வப்போது சாலையிலும் உலா வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பீதியடைந்து உள்ளனர்.

எனவே அந்த காட்டுயானைகளை கண்காணித்து, அங்கிருந்து விரட்டியடிக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் வனத்துறையினர் காட்டுயானைகளை கண்காணித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்