மாயமான மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - முதல்-அமைச்சரிடம், இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை
மாயமான மீனவரை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு இன்பதுரை எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் கூத்தங்குழியை சேர்ந்த தாசன் மகன் சிலுவை கித்தேரியான் (வயது 49). இவர் கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. சிலுவை கித்தேரியான் கடலில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.
மாயமான சிலுவை கித்தேரியானை மீட்க இன்பதுரை எம்.எல்.ஏ. தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். அவர் நேற்று மாலை நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பாவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாயமான சிலுவை கித்தேரியானை மீட்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று நேற்று முன்தினம் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தேன். அவர் நடவடிக்கையை துரிதப்படுத்துவதாக உறுதி அளித்தார்.
நேற்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அலுவலகத்தை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது அதிகாரிகள், மீட்பு பணியை தீவிரப்படுத்தி வருகிறோம். சென்னை மற்றும் தூத்துக்குடி கடலோர காவல்படை மூலம் மீட்க தீவிர முயற்சி நடந்து வருகிறது. ‘அபிராஜ்‘ என்ற போர் கப்பல் மூலம் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருக்கிறோம். இதுதவிர கன்னியாகுமரி பகுதியில் சுற்றுவட்டார மீனவ கிராமத்தை சேர்ந்தவர்களும் மாயமான சிலுவை கித்தேரியானை தேடி வருகிறார்கள். ஹெலிகாப்டர் மூலமும் தேடுதல் பணி நடக்கிறது. விரைவில் சிலுவை கித்தேரியானை கண்டுபிடித்து விடுவோம் என்று உறுதி அளித்தனர்.
மாயமான மீனவர் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் கலெக்டரிடம் மனு கொடுத்து உள்ளேன். அவரை கண்டுபிடிக்கும் வரை அவரது குடும்பத்துக்கு இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கேட்டுக்கொண்டேன். அதற்கு அவர், மனுவை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ராதாபுரம் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா உடன் இருந்தார்.
வள்ளியூர் தெற்கு மெயின் ரோட்டில் உள்ள பாறை கிடங்கு பகுதியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணியை இன்பதுரை எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிகழ்ச்சியில், வள்ளியூர் நகர பஞ்சாயத்து செயல் அலுவலர் கிறிஸ்டோபர் தாஸ், உதவி செயற்பொறியாளர் வாசுதேவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.