சட்டமன்ற கூட்டத்தொடரில் தமிழகத்தில் தமிழர்களுக்கு வேலை என்று அறிவிப்பு வெளியிட வேண்டும் வேல்முருகன் வலியுறுத்தல்
தமிழகத்தில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை என்ற அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
நெல்லை,
தமிழகத்தில் தமிழர்களுக்கு மட்டுமே வேலை என்ற அறிவிப்பை வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் வெளியிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் கூறினார்.
இதுகுறித்து அவர் நெல்லையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
வேலை வாய்ப்பு
தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணிகளில் 90 சதவீதம் தமிழர்களை நியமிக்க வேண்டும். தமிழக அரசு வேலை வாய்ப்பில் பிற மாநிலத்தவர்கள் சேருவதற்கான வாய்ப்பை ரத்து செய்ய வேண்டும். இதற்காக வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் கவர்னர் உரையில் மண்ணின் மைந்தர்களுக்கு மட்டுமே தமிழகத்தில் வேலை வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் வட மாநிலத்தினர் தமிழகத்தில் வேலை வாய்ப்பு பெறுவதை தடுத்து நிறுத்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
நாடு முழுவதும் இந்து, முஸ்லிம் உள்பட அனைவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்கள் மீது கடுமையான அடக்கு முறையை மத்திய அரசின் உதவியோடு தமிழக அரசு செய்து வருகிறது. இந்த சட்டத்துக்கு எதிராக கோலம் போட்டு போராட்டம் நடத்திய பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்தது கடும் கண்டனத்துக்கு உரியது.
ஈழத்தமிழர்கள்
குடியுரிமை திருத்த சட்டத்தை இந்தியாவில் நிறைவேற்றிய பிறகு, ஈழத்தமிழர்களை, இலங்கை சிங்கள அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசு நினைக்கிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.
வாகனங்களுக்கு ஆயுட்கால வரி செலுத்தி விடுவதால் சுங்கச்சாவடிகள் அமைத்து கட்டணம் வசூலிக்கக்கூடாது. சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அகற்ற வேண்டும். இல்லை என்றால் வாகனம் வாங்கும் போது வசூலிக்கப்படும் ஆயுட்கால வரியை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.