அம்பை அருகே வாலிபர் அடித்துக் கொலையா? ரெயில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார்
அம்பை அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விக்கிரமசிங்கபுரம்,
அம்பை அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிணமாக கிடந்த வாலிபர்
நெல்லை மாவட்டம் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் இருந்து சிங்கம்பாறைக்கு செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது. அங்கிருந்து சில அடி தூரத்தில் உள்ள தண்டவாளத்தில் நேற்று காலை வாலிபர் ஒருவர் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக தென்காசி ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையா?
பின்னர் இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இறந்து கிடந்தவர் கல்லிடைக்குறிச்சி மேல்முக நாடார் தெருவை சேர்ந்த சாமுவேல் மகன் ராஜாசிங் (வயது 32), கூலித்தொழிலாளி என்பது தெரியவந்தது. மேலும் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் ராஜாசிங்கை யாராவது மர்மநபர்கள் அடித்துக் கொலை செய்தனரா? அல்லது வேறு ஏதாவது காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இறந்த ராஜாசிங்கிற்கு செல்வி (25) என்ற மனைவியும், ரெனிசன் (1½) என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
அம்பை அருகே ரெயில் தண்டவாளத்தில் வாலிபர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.