வந்தவாசி அருகே, சாலையில் வீசப்பட்ட சேலைகள், காமாட்சி அம்மன் விளக்குகள் - பறக்கும் படையினர் கைப்பற்றினர்

வந்தவாசி அருகே 2 இடங்களில் சாலையில் வீசப்பட்ட100 சேலைகள் மற்றும் 21 காமாட்சி அம்மன் விளக்குகளை பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

Update: 2019-12-29 22:45 GMT
வந்தவாசி,

வந்தவாசி ஊராட்சி ஒன்றியத்தில் இன்று (திங்கட்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி இந்த ஒன்றியத்தில் 233 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 70 வாக்குச்சாவடிகள் பதற்றமானதாகும். 44 ஆயிரத்து 68 ஆண் வாக்காளர்களும், 44 ஆயிரத்து 157 பெண் வாக்காளர்களும், 3 மூன்றாம் பாலினத்தவர்களும் என மொத்தம் 88 ஆயிரத்து 228 பேர் வாக்களிக்க உள்ளனர்.

 இதையொட்டி நேற்று தேர்தல் அலுவலர்கள் பி.சிவசங்கரன், ப.பரணிதரன், உதவி தேர்தல் அலுவலர் வி.ஆர்.ரவி ஆகியோர் மேற்பார்வையில் வாக்குப்பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் ஆகியவை அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு லாரிகளில் ஏற்றி போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் வந்தவாசி ஒன்றியத்தைச் சேர்ந்த வழூர்அகரம் கிராமத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாக்காளர்களுக்கு சேலைகள் வழங்கப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பறக்கும் படையினர் அகத்தீஸ்வரன் தலைமையில் அந்த கிராமத்திற்கு விரைந்து சென்றனர்.

பறக்கும் படையினரை கண்டதும் வாக்காளர்களுக்கு சேலைகளை வழங்கி கொண்டிருந்தவர்கள் சேலைகளை சாலையில் போட்டு விட்டு ஓடிவிட்டனர். இதைத்தொடர்ந்து சாலையில் வீசப்பட்ட சுமார் ரூ.200 மதிப்புள்ள 100 சேலைகளை பறக்கும் படையினர் கைப்பற்றி வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலர் ப.பரணிதரனிடம் ஒப்படைத்தனர்.

இதேபோல் நேற்று முன்தினம் வந்தவாசி தாலுகா இளங்காடு கயநல்லூர் பகுதியில் வாக்காளர்களுக்கு காமாட்சிஅம்மன் விளக்குகள் சிலர் வழங்குவதாக துளசிராமன் தலைமையிலான பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அவர்கள் அப்பகுதிக்கு சென்றனர்.

பறக்கும் படையினர் வருவதை கண்டதும் காமாட்சி அம்மன் விளக்குகளை கொடுத்துக் கொண்டிருந்தவர்கள் விளக்குகளை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடினர். இதை தொடர்ந்து சாலையில் கிடந்த 21 காமாட்சி அம்மன் விளக்குகளை பறக்கும் படையினர் கைப்பற்றி வந்தவாசி ஊராட்சி ஒன்றிய தேர்தல் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்