செல்லம்பட்டி பகுதி கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

செல்லம்பட்டி பகுதி கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதான கால்வாயில் தண்ணீர் திறக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-12-28 22:15 GMT
உசிலம்பட்டி, 

செல்லம்பட்டி பகுதி கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டு விட்டன. திருமங்கலம் பிரதானகால்வாயில் வருகிற வைகை அணை தண்ணீர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கண்மாய்களுக்கு திறந்து விடக்கோரி சாலை மறியலில் ஈடுபடப்போவதாக விவசாயிகள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி செல்லம்பட்டி யூனியன் அலுவலகம் முன்பு மதுரை-உசிலம்பட்டி தேசியநெடுஞ்சாலையில் நேற்று மறியலில் ஈடுபட முயன்றனர். உசிலம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் சார்லஸ் உள்ளிட்ட போலீசார் தடுத்து நிறுத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது செல்லம்பட்டி பகுதியிலுள்ள ஆரியபட்டி, உச்சபட்டி, நாட்டாமங்கலம், வலங்காகுளம், வாகைக்குளம், அம்மட்டையம்பட்டி, சிந்துபட்டி, செம்பட்டி, கன்னியம்பட்டி, பெருமாள்பட்டி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட கண்மாய்களுக்கு திருமங்கலம் பிரதானகால்வாயில் வருகிற தண்ணீரைதான் நிரப்பவேண்டும். தற்போது தண்ணீரை நிறுத்தி விட்டனர். இந்த நிலை நீடித்தால் குடிக்கத்தண்ணீரில்லாமல் பரிதவிக்கின்ற நிலை ஏற்படும். இது குறித்து பலமுறை கலெக்டர், தாசில்தார், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் முறையிட்டும் பலனில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினார்கள். இதனைத் தொடர்ந்து விவ சாயிகள் மறியலை கைவிட்டு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்தனர். அதன்படி ஆர்ப்பாட்டம் நடந்தது.

பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அம்மட்டையன்பட்டி ஜெயராமன், பாசனக்கோட்டத்தலைவர் மேட்டுப்பட்டி பழனி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊர்த்தலைவர் ராமன், வாகைக்குளம் தங்கராஜ், ராஜா, உச்சப்பட்டி வக்கீல் நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுப்பணித்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்டமாக அனைத்து கிராம விவசாயிகளையும் ஒருங்கிணைத்து போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்