பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு திடீர் ஆய்வு
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
நெல்லை.
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
தீயணைப்பு நிலையத்தில் ஆய்வு
தமிழக ரெயில்வே துறை டி.ஜி.பி.யாக பொறுப்பு வகிப்பவர் சைலேந்திரபாபு. இவருக்கு தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குனர் பொறுப்பு கூடுலாக ஒதுக்கப்பட்டது.
இதையடுத்து அவர் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை ஆய்வு செய்து வருகிறார். அதன்படி டிஜி.பி. சைலேந்திரபாபு நேற்று காலை 7 மணி அளவில் பாளையங்கோட்டையில் உள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வந்தார். அவர் ஆய்வு செய்து, தீயணைப்பு உபகரணங்களை பார்வையிட்டார்.
அனைத்து உபகரணங்களும் சரியாக பராமரிக்கப்பட்டு இருக்கிறதா? என ஆய்வு செய்தார். நவீன முறையில் நுரை மூலமாக தீயை அணைக்கும் உபகரணங்களை பரிசோதனை செய்து பார்த்தார்.
உபகரணங்கள் சோதனை
மேலும் பல்வேறு உபகரணங்களை சோதனை செய்து பார்த்தார். அப்போது தீயணைப்பு வீரர்கள், தீ விபத்து ஏற்பட்டால் அதனை எப்படி அணைப்பது? என்று செயல்விளக்கம் காண்பித்தனர். பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, அதிகாரிகளிடம் வேறு கருவிகள் தேவைப்படுகிறதா? என்று கேட்டறிந்தார். பின்னர் சைலேந்திர பாபு, தீயணைப்பு நிலைய வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார்.
ஆய்வின் போது, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர் மகாலிங்க மூர்த்தி, உதவி தீயணைப்பு அலுவலர் சுரேஷ் ஆனந்த், நிலைய அலுவலர் வீரராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.