ஊரக உள்ளாட்சி தேர்தலில் “அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவார்கள்” அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
“ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவார்கள்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
கயத்தாறு,
“ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஒட்டுமொத்த ஆதரவை வழங்குவார்கள்” என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.
இறுதிகட்ட பிரசாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான 2-ம் கட்ட தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி இறுதிகட்ட பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது.
அ.தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளரும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சருமான கடம்பூர் ராஜூ நேற்று காலையில் கயத்தாறு அருகே கம்மாபட்டியில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து, திறந்த ஜீப்பில் சென்று பிரசாரத்தை தொடங்கினார்.
உற்சாக வரவேற்பு
பின்னர் அவர் தெற்கு இலந்தைகுளம், மானங்காத்தான், ஆத்திகுளம், ராஜாபுதுக்குடி, சன்னது புதுக்குடி, சின்னமலைக்குன்று, தெற்கு மயிலோடை, சோழபுரம், தொட்டம்பட்டி, அச்சங்குளம், தீத்தாம்பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வாக்கு சேகரித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அ.தி.மு.க. ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் வண்டானம் கருப்பசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பிரசாரத்தின்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களிடம் கூறியதாவது:-
பொங்கல் பரிசு தொகுப்பு
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில், தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து ரேஷன்கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் ரூ.100 வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா தொடங்கினார். பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் ரூ.1,000 ஆக உயர்த்தி வழங்கினார். இதனை நிறுத்துவதற்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் முறையிட்டன. ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு பின்னர் பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களுடன் ரூ.1,000 அனைவருக்கும் வழங்கப்படும்.
100 சதவீத வெற்றி
தமிழகத்தில் அனைத்து நலத்திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதனால் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் ஒட்டுமொத்த ஆதரவையும் வழங்குவது உறுதி. தூத்துக்குடி மாவட்டத்தில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் 100 சதவீதம் வெற்றி பெறுவார்கள்.
இந்திய அளவில் மக்களுக்கு நல்லாட்சி வழங்கியதில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது. இதற்கு மத்திய அரசு நற்சான்றிதழ் வழங்கி உள்ளது. இதற்கு தமிழக மக்களுடன் சேர்ந்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பெருமைப்பட வேண்டும். மாறாக அவர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்க மனமில்லை என்றாலும், சிறுமைப்படுத்தக்கூடாது. அவர் எதிலும் சந்தேகம் கொள்வதையே வாடிக்கையாக கொண்டு உள்ளார். இது அவர் ஒரு நல்ல எதிர்க்கட்சி தலைவருக்குரிய இலக்கணமாக செயல்படவில்லை என்பதையே காட்டுகிறது.
இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.