தமிழ்நாட்டில் நீர்மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் - டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேச்சு

தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்க வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி, பேசினார்.

Update: 2019-12-28 23:00 GMT
செஞ்சி,

மயிலம் சட்டமன்ற தொகுதி பா.ம.க.வின் முப்படைகள் சந்திப்பு கூட்டம் செஞ்சி அருகே உள்ள செல்லபிராட்டியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார். மாநில இணை பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, மாநில அமைப்பு செயலாளர் செல்வகுமார், மாநில துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கனல்பெருமாள் வரவேற்று பேசினார்.

மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இராம.கன்னியப்பன், மாநில துணை அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணி, மணி மாறன், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் சேட்டு ரங்கநாதன், வேல்முருகன், இளைஞர் சங்கம் சரவணன், அன்பழகன், பூங்காவனம், கண்ணாயிரம், ஸ்ரீராம், சீனு தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ராஜாராம், வி‌‌ஷ்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. கலந்து கொண்டு பேசியதாவது.:-

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோம் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் நீர் மேலாண்மைக்கு 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, தமிழ்நாட்டின் தேவைகளை மத்திய, மாநில அரசுகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்பது எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கையாகும்.

சமீபத்தில் பிரதமரை நேரில் சந்தித்து கோதாவரி, காவிரி இணைப்பு திட்டத்தை நடைமுறை படுத்துங்கள் என்ற கோரிக்கையை முன்வைத்தோம். நிச்சயமாக அதை செய்வேன் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார். 2 வாரத்திற்கு முன்பு கூட நாடாளுமன்றத்தில் இது குறித்து பேசியிருக்கிறேன். மக்களவை தேர்தலுக்கு முன்பு இந்த திட்டத்திற்கு நிதின்கட்காரி ரூ.65 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வேன் என்று உறுதி அளித்துள்ளார். இந்த திட்டம் அவசியமாக உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். இந்த திட்டம் நிறைவேறினால், தெலுங்கானாவும், ஆந்திராவும், தமிழ்நாடும் மிகப்பெரிய பயன் பெறும். தமிழ்நாட்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும். இதேப்போல் தமிழ் நாட்டில் நந்தன் கால்வாய் திட்டம், அத்திக்கடவு, அவினாசி திட்டம், காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம் உள்பட 20 நீர்பாசன திட்டங்கள் நிலுவையில் உள்ளன. இதற்கு 1 லட்சம் கோடி ரூபாய் வேண்டும்.

காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என எந்த திட்டமும் இருக்க கூடாது. இந்த பகுதியை விவசாயத்துக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. இதுதொடர்பாக முதல்-அமைச்சரை 2 முறை சந்தித்து வலியுறுத்தியுள்ளேள்.

தமிழ்நாட்டில் அதிக இளைஞர்களை கொண்ட கட்சி பா.ம.க. தான். எங்களுடைய செயல் திட்டங்கள் இளைஞர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது. குறிப்பாக கல்வி, சுகாதாரம், விவசாயம் எப்படி இருக்க வேண்டும், நீர் மேலாண்மைக்கு என்ன செய்ய வேண்டும். தொழில் வளர்ச்சி, வேலை வாய்ப்பு ஆகியவற்றை எப்படி பெருக்குவது? மதுவை ஒழிப்பது எப்படி? என இளைஞர்கள் மத்தியில் நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.

எங்கள் கருத்துக்கள் புதுமையாக உள்ளது என மக்கள் நினைக்கின்றனர். அதில் எங்களுக்கும் நம்பிக்கை உள்ளது. 2016-ம் ஆண்டு பா.ம.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை சொல்லி உள்ளோம்.

தமிழ்நாட்டில் 8 ஆயிரம் மதுக்கடைகள் இருந்தன. தற்போது 5 ஆயிரம் மதுக்கடைகள்தான் இருக்கிறது. 3 ஆயிரம் கடைகள் எங்களால் தான் மூடப்பட்டிருக்கிறது. இந்தியாவில் அதிகம் மது விற்பனையாகும் மாநிலம் தமிழ்நாடுதான். அதிகம் சாலை விபத்து நடைபெறும் இடமும் தமிழ்நாடுதான். இதற்கு காரணம் மது. இதனை ஒழிக்க சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடி வருகிறோம். ஒரு சொட்டு மதுகூட இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை நாங்கள் உருவாக்குவோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் போடும் முதல் கையெழுத்தும் மதுவிலக்குக்கு தான்.

இவ்வாறு டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார்.

முடிவில் ஒன்றிய செயலாளர் அரிகிரு‌‌ஷ்ணன் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்