சாதி, மதம் பெயரில் நாட்டை துண்டாக்க முயற்சி மத்திய பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் சித்தராமையா பேச்சு
சாதி, மதம் பெயரில் நாட்டை துண்டாக்க முயற்சிக்கும் மத்திய பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
சாதி, மதம் பெயரில் நாட்டை துண்டாக்க முயற்சிக்கும் மத்திய பா.ஜனதா அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பாதயாத்திரை
காங்கிரஸ் கட்சியின் 135-வது ஆண்டு விழாவையொட்டி நாட்டை பாதுகாப்போம், அரசியல் அமைப்பை காப்பாற்றுவோம் என்பதை வலியுறுத்தி பெங்களூரு குயின்ஸ் ரோட்டில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் இருந்து சுதந்திர பூங்காவுக்கு தலைவர்கள் நடைபயணம் புறப்பட்டு சென்றனர். இதில், மாநில தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் சுதந்திர பூங்காவில் நடந்த கட்சி பொதுக்கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
போராட்டக்காரர்கள் அல்ல
பா.ஜனதாவினரும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பினரும் சுதந்திர போராட்டக்காரர்கள் அல்ல. பிரதமர் நரேந்திர மோடி தன்னை மகான் என்றும், தேச பக்தர் என்றும் கூறிக் கொள்கிறார். நம் நாடு சுதந்திரம் அடைந்த பின்பு தான் நரேந்திர மோடி பிறந்திருக்கிறார். ஆனால் அவர் தன்னை தேசபக்தர் என்று கூறிக் கொள்கிறார். வரலாற்றை மாற்றுவதே பா.ஜனதாவின் வேலையாக உள்ளது. பா.ஜனதாவினருக்கு உண்மை எது என்றே தெரிவதில்லை.
காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இதுவரை தங்களை கைது செய்ய வேண்டாம், போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என்று கூறியதில்லை. ஆனால் சாவர்க்கர் என்னை கைது செய்ய வேண்டாம், நான் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று கூறி இருக்கிறார். அவரை தான் பா.ஜனதாவினர் வீரர் என்று சொல்கிறார்கள். சாவர்க்கர் நாணயத்தை வெளியிடுகின்றனர். நான் சாவர்க்கர் அல்ல என்று ராகுல்காந்தி கூறியது சரியானதாகும்.
பா.ஜனதா அல்லாத நாட்டை...
நாட்டுக்கு எந்த திட்டங்கள் எல்லாம் தேவையில்லையோ, அந்த திட்டங்களை மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி செயல்படுத்தி வருகிறார். நாட்டுக்கு எதிரான திட்டங்கள் பற்றி பா.ஜனதாவினர் பேசுவதே இல்லை. நாட்டின் பொருளாதாரம் அதள பாதாளத்திற்கு சென்று விட்டது. நாட்டில் வேலையில்லாத திண்டாட்டம் நிலவுகிறது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய பா.ஜனதா அரசு தவறி விட்டது. வேலையில்லாத இளைஞர்கள் பக்கோடா விற்க செல்ல வேண்டுமா?.
தற்போது குடியுரிமை திருத்த மசோதா, தேசிய குடிமக்கள் பதிவேடுவை அமல்படுத்தி மக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிக்கிறது. நாட்டில் சாதி, மத பெயரில் நாட்டை துண்டாக்கும் வேலையில் மத்திய பா.ஜனதா அரசு ஈடுபடுகிறது. இந்த அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர். நாட்டில் 2-வது முறையாக பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்பு நடந்த சட்டசபை தேர்தல்களில் 5 மாநிலங்களில் ஆட்சியை இழந்துள்ளது. பா.ஜனதா அல்லாத நாட்டை உருவாக்க மக்கள் தயாராகி விட்டனர்.
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்
சமுதாயத்தில் ஏற்ற, தாழ்வு இருக்க வேண்டும் என்பதே பா.ஜனதாவின் நோக்கம். இந்த நாட்டை பாதுகாக்கவும், அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவும் காங்கிரஸ் கட்சி போராடி வருகிறது. மாநிலத்தில் பின்பக்க வாசல் வழியாக பா.ஜனதா ஆட்சிக்கு வந்துள்ளது. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி எடியூரப்பா முதல்-மந்திரி ஆகியுள்ளார். எடியூரப்பா எப்போதும் பின்வாசல் வழியாக முதல்-மந்திரி ஆகுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தோல்வி அடைவது உறுதி. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும். அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் 100 தொகுதிகளில் கூட பா.ஜனதாவால் வெற்றி பெற முடியாது. இளைஞர்களிடையே உணர்வு பூர்வமான விஷயங்களை தூண்டிவிட்டு பா.ஜனதாவினர் அரசியல் செய்கின்றனர். இதனை இளைஞர்கள் தற்போது புரிந்து கொண்டுள்ளனர். காங்கிரஸ் கூட்டத்திற்கு வந்திருக்கும் இளைஞர்கள் மூலம் இதனை தெரிந்துகொள்ள முடிகிறது.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.