பெங்களூருவில் 31-ந் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் பேட்டி
வருகிற 31-ந் தேதி இரவு பெங்களூருவில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் ஈடுபட உள்ளனர்.
பெங்களூரு,
இந்தியாவில் ஆங்கில புத் தாண்டை கோலாகலமாக கொண்டாடும் நகரங்களில் பெங்களூருவும் ஒன்று.
புத்தாண்டு கொண்டாட்டம்
பெங்களூரு நகரில் பிரிகேட் ரோடு, எம்.ஜி. ரோடு, சர்ச்தெரு, ரெசிடென்சி ரோடு, செயின்ட் மார்க்ஸ் ரோடு உள்பட பல்வேறு இடங்களில் ஆண்டுதோறும் புத்தாண்டு கொண்டாட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டும் வருகிற 31-ந் தேதி இரவு பல்வேறு இடங்களில் 2020-ம் ஆண்டு புத்தாண்டை வரவேற்று கொண்டாட ஏராளமான பொதுமக்கள் திரள உள்ளனர்.
இந்த கொண்டாட்டத்தின்போது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க பெங்களூரு மாநகர போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர். இதுகுறித்து நேற்று பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
பெங்களூரு பிரிகேட் ரோடு, எம்.ஜி. ரோடு, கோரமங்களா, இந்திராநகர் உள்பட பல்வேறு இடங்களில் வருகிற 31-ந் தேதி இரவு புத்தாண்டு கொண்டாட்டம் நடக்க உள்ளது. இதனால் வருகிற 31-ந் தேதி இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 8 மணி வரை 2 ஷிப்ட்டுகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
2 கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் மேற்பார்வையில் 11 துணை போலீஸ் கமிஷனர்கள், 70 உதவி போலீஸ் கமிஷனர்கள், 230 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் கர்நாடக ஆயுதப்படை, நகர ஆயுதப்படையை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் தனியார் நிறுவன பாதுகாவலர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.
1,500 கண்காணிப்பு கேமராக்கள்
நகரில் 270 ஒய்சாலா வாகனங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடும். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும். இந்த இடங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்படுவார்கள். அனைத்து இடங்களிலும் மோப்பநாய்கள் பயன்படுத்தப்படும்.
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி 1,500 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. மங்களூருவில் நடந்த கலவரத்தில் கண்காணிப்பு கேமராக்கள் சூறையாடப்பட்டன. இதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் ரகசியமாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.
மெட்ரோ ரெயில் சேவை நீட்டிப்பு
புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி பி.எம்.டி.சி. பஸ் மற்றும் மெட்ரோ ரெயில்களின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. பி.எம்.டி.சி. பஸ்கள், மெட்ரோ ரெயில்கள் அதிகாலை 2 மணி வரை இயங்க உள்ளது. மேலும் புத்தாண்டு அன்று ஆட்டோ டிரைவர்கள், வாடகை கார் ஓட்டுனர்கள் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். தவறாக நடந்து கொண்டால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வாடகை கார் டிரைவர்கள் மீது ஏதேனும் குற்றச்சாட்டு எழுந்தால் அவர்கள் மீதும், அவர்கள் பணியாற்றும் நிறுவனங்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன். அத்துடன் பொதுமக்களிடம் ஆட்டோ டிரைவர்கள் மற்றும் வாடகை கார் டிரைவர்கள் அதிகமாக பணம் வசூலிப்பது பற்றி சம்பந்தப்பட்ட வாகனங்களின் பதிவெண் விவரங்களுடன் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கலாம்.
மதுபான விடுதி நேரம்
பெங்களூரு நகரில் நள்ளிரவு 1 மணி வரை மட்டும் மதுபான விடுதிகள், ஓட்டல்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மதுபான விடுதி, ஓட்டல்கள் ஆகியவை அதிகாலை 2 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மதுபான விடுதியை பொறுத்தமட்டில் நள்ளிரவு 1 மணியுடன் மதுபான வினியோகம் நிறுத்தப்படும். அதன்பிறகு 2 மணிக்கு மதுபான விடுதியில் இருந்து அனைவரும் வெளியேற்றப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் போதைப்பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் அதை பயன்படுத்தி பிரச்சினை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின்போது கூடுதல் போலீஸ் கமிஷனர்களான முருகன், உமேஷ் குமார், மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இணை கமிஷனர் சந்தீப் பட்டீல் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.