ஊரக உள்ளாட்சிக்கான 2-ம் கட்ட தேர்தல்: ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு

ஊரக உள்ளாட்சிக்கான 2-ம் கட்ட தேர்தலையொட்டி ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களில் நாளை வாக்குப்பதிவு நடக்கிறது.

Update: 2019-12-28 22:15 GMT
ஊட்டி, 

தமிழகத்தில் 9 ஆண்டுகளுக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முதல் கட்டமாக குன்னூர், கோத்தகிரி ஆகிய 2 ஊராட்சி ஒன்றியங்களில் நேற்று முன்தினம் நடந்து முடிந்தது. குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 22 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 17 கிராம ஊராட்சி தலைவர், 177 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 218 பதவி இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

குன்னூர், கோத்தகிரி ஒன்றியங்களில் ஆண் வாக்காளர்கள் 40 ஆயிரத்து 094 பேர், பெண் வாக்காளர்கள் 43 ஆயிரத்து 629 பேர் என மொத்தம் 83 ஆயிரத்து 723 பேர் உள்ளனர். நீலகிரியில் முதல் கட்ட தேர்தலில் 65.86 சதவீத வாக்குகள் பதிவானது. 26 ஆயிரத்து 877 ஆண் வாக்காளர்கள், 28 ஆயிரத்து 262 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 55 ஆயிரத்து 139 வாக்காளர்கள் வாக்களித்து இருக்கின்றனர். 67.03 சதவீதம் ஆண் வாக்காளர்களும், 64.78 சதவீதம் பெண் வாக்காளர்களும் வாக்களித்து உள்ளனர். தேர்தலில் 28 ஆயிரத்து 584 பேர் வாக்களிக்க வில்லை.

முதல் கட்ட தேர்தலில் சில வாக்குச்சாவடிகளில் மாலை 6 மணிக்கு மேல் வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. ஆதிவாசி மக்கள் நடந்து வந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். பொதுமக்கள் வேலைக்கு செல்வதற்கு முன்பு வாக்களித்து விட்டு செல்வதற்காக காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். முதியவர்கள் ஊன்றுகோலுடன் நடந்து வந்து வாக்களித்தார்கள். மதியத்துக்கு பின்னர் சில வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வாக்காளர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தது.

தேர்தல் நடத்தும் அலுவலர்கள் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இருந்தாலும் குன்னூர் மற்றும் கோத்தகிரி ஒன்றியங்களில் வாக்கு சதவீதம் குறைவாக உள்ளது. 2-ம் கட்டமாக ஊட்டி மற்றும் கூடலூர் ஒன்றியங்களில் 275 பதவி இடங்களுக்கு நாளை (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதை யொட்டி வாக்குச்சாவடிகளுக்கு அனுப்புவதற்காக ஊட்டி பிரிக்ஸ் பள்ளியில் வாக்குப் பெட்டிகள் தயார்நிலையில் உள்ளது. மேலும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் செய்திகள்