டெல்லியில் பிரதமர் மோடியுடன் ஏற்றுமதியாளர்கள் சந்திப்பு: தொழில்துறையினரின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தல்

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை ஏற்றுமதியாளர்கள் சந்தித்தனர். தொடர்ந்து தொழில்துறையினரின் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர்.

Update: 2019-12-27 23:13 GMT
திருப்பூர்,

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம், இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ் பெடரேசன் கன்வீனர் பிரபு தாமோதரன், இந்திய ஜவுளித்தொழில் கூட்டமைப்பின் சேர்மன் ராஜ்குமார், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க (சைமா) செயலாளர் ஜெனரல் செல்வராஜூ மற்றும் நாடு முழுவதும் உள்ள ஜவுளித்துறையை சேர்ந்த 11 ஏற்றுமதியாளர்கள் டெல்லி ரேஸ்கோர்சில் உள்ள பிரதமர் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தனர். 2 மணி நேரம் இந்த சந்திப்பு நடந்தது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:- கடந்த 24-ந் தேதி தொழில்துறை செயலாளர் குருபிரசாத் மொகபத்ரா போனில் தொடர்பு கொண்டு, பிரதமர் தொழில்துறையினரை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்க உள்ளதாகவும், இதில் ஏற்றுமதியாளர்கள் சங்கம் சார்பில் உங்களுக்கு (எனக்கு) அழைப்பு விடுக்கவும் தெரிவித்தார். அதன்படி என்னுடன் சில தொழில்துறையினரும் டெல்லிக்கு வந்தனர்.

எங்களுடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது பின்னலாடை தொழிலின் நிலை மற்றும் அதில் உள்ள பிரச்சினைகள், தொழில்துறையினரின் தேவைகள் போன்றவை குறித்து கேட்டறிந்தார். தற்போது தவறுகளாக ரீபண்டிற்கு பதிவு செய்துள்ள சில ஏற்றுமதியாளர்கள் ரிஸ்கி ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களால் ரீபண்டு பெற முடியவில்லை. இதனால் ஏற்றுமதியாளர்கள் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தெரிவித்தேன். மேலும், பின்னலாடை துறைக்கு தனிவாரியம், திருப்பூரில் தொழிலாளர் குடியிருப்பு வசதி, நாடு முழுவதும் ஜவுளித்துறைக்கு மெகா டெக்ஸ்டைல் பார்க், செயற்கை நூழிலை, துணி ரகங்கள் இறக்குமதிக்கு வரி விலக்கு, பின்னலாடை நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர் திறனை மேம்படுத்தும் பயிற்சி திட்டங்கள், சூரியஒளி, காற்றாலை மின் உற்பத்தியில் ஈட்டும் வருவாய்க்கு வரி விலக்கு பெற்றுத்தருதல், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் வரை, ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் தொடர வேண்டும் என்பது உள்பட தொழில்துறையினரின் கோரிக்கைகளை வலியுறுத்தினேன். இதுபோல் மற்றவர்களும் அவர்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

இதன் பின்னர் தமிழக ஜவுளித்துறையினரின் அனைத்து கோரிக்கைகளையும் உள்ளடக்கி ஒரே மனுவாக வழங்கும்படி பிரதமர் கூறினார். இந்த மனுவை தயார் செய்ய உள்ளோம். தொழில் வளர்ச்சிக்கான கோரிக்கைகள் நிறைவேற்றித்தரப்படும் என்று மோடி உறுதியளித்துள்ளார்.

கடந்த 6 மாதமாக ஆடை தயாரிப்பு தொழில் மந்தமான நிலையில் உள்ளது. தற்போது பிரதமர் மோடியுடன் இந்த சந்திப்பு ஆடை உற்பத்தி துறை சரிவில் இருந்து மீண்டு வரும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்