கவர்னர் கிரண்பெடி மனசாட்சி இல்லாமல் செயல்படுகிறார் - நாராயணசாமி தாக்கு
கவர்னர் கிரண்பெடி மனசாட்சி இல்லாமல் செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார். புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
புதுச்சேரி,
மத்திய அரசின் பணியாளர் நலத்துறை மாநிலங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சிறிய மாநிலங்களில் நிர்வாகத்தில் புதுச்சேரி மாநிலம் முதல் இடம் வகிப்பதாக தெரிவித்துள்ளது. மருத்துவம், மனிதவள மேம்பாடு, சட்டம்-ஒழுங்கு, நீதி நிர்வாகம் போன்றவற்றிலும் நமக்கு முதல் இடம் கிடைத்துள்ளது.
9 துறைகளை கணக்கெடுத்து ஆய்வு செய்து அதில் 4 இடத்தில் புதுச்சேரிக்கு முதல் இடம் கிடைத்துள்ளது. விவசாயத்துறையில் 2-வது இடத்தை பிடித்துள்ளோம். புதுவையில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மத்திய அரசிடமிருந்து போதிய நிதியுதவி கிடைக்காவிட்டாலும் மாநில வருமானத்தை வைத்து வளர்ச்சியடைய வேண்டியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி 11.4 சதவீதமாக இருந்தாலும் மத்திய அரசிடம் நிதி கேட்டால் மாநில அரசுகள் வெளிச்சந்தையில் கடன்பெறுவதற்கான எல்லைக்குள்ளேயே இருப்பதால் அதன்மூலம் வெளிச்சந்தையில் கடன் பெறுமாறு கூறுகிறார்கள். நாம் மத்திய அரசிடம் மானியம் கேட்கவில்லை. 7-வது ஊதியக்குழுவின் பரிந்துரையை அமல்படுத்தியதால் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய ஓய்வூதிய நிதியை கேட்கிறோம்.
ஆண்டுதோறும் மத்திய அரசு பட்ஜெட்டிற்கான நிதியை 10 சதவீதம் உயர்த்தி தரவேண்டும். ஆனால் மத்திய அரசு அதை செய்வதில்லை. மத்திய அரசின் உதவி இல்லாமலும், மாநிலத்திலும் தொல்லை கொடுத்தாலும் அதையும் மீறி சாதனைகள் படைத்துள்ளோம். இது ஒரு இமாலய சாதனை. இந்தியாவில் எந்த மாநிலமும் இதுபோன்ற வளர்ச்சியை பெற்றதில்லை.
எங்கள் அரசுக்கு மத்தியில் முறையாக கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பும், மாநிலத்தில் உள்ள தொல்லையும் நீங்கினால் மாநிலத்தின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். பல விருதுகள் வாங்கினாலும் சிலர் (கவர்னர்) சமூக வலைதளத்தில் தலைமை செயலாளர் தலைமையிலான குழுவுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளனர். இதிலிருந்து அவர்களின் பழிவாங்கும் போக்கு, அரசின் செயல்பாடுகளை அங்கீகரிக்காத நிலை தெரிகிறது.
கவர்னர் கிரண்பெடி கல்வித்துறை சரியாக செயல்படவில்லை என்றார். ஆனால் கல்வித்துறை முதல் இடத்தை பிடித்துள்ளது. அதிகாரிகளை கூப்பிட்டு மிரட்டும் செயலை அவர் கொண்டிருந்தார். புதுவை மாநில அதிகாரிகளை சுதந்திரமாக செயல்பட விட்டாலே சரியாக வேலை செய்வார்கள். தனக்கு அதிகாரம் இல்லாதபோது அரசை குறை சொல்வது, மக்கள்நல திட்டங்களை முடக்குவது போன்ற செயல்களை செய்கிறார்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவர் ஒன்றும் செய்யவில்லை. ஆனால் நாங்கள் இந்த சாதனையை படைத்துள்ளோம். இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதில் கூட்டணி கட்சிகள், அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், மருத்துவர்கள், பொதுமக்களின் பங்கு உள்ளது. ஆனால் கவர்னர் கிரண்பெடி மனசாட்சி இல்லாமல் சமூக வலைதளத்தில் பதிவிடுகிறார். அதற்கு பொதுமக்கள் தக்க பதிலடி கொடுத்துள்ளனர். யார் நல்லது செய்வார்கள் என்று அவர்களுக்கு தெரிந்துள்ளது.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
மேலும் அவரிடம் கேசினோ, மது விற்பனை, லாட்டரிக்கு கவர்னர் கிரண்பெடி எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியதாவது:-
புதுவை மாநிலத்துக்கு சுற்றுலா வருபவர்கள் என்ன விரும்புகிறார்களோ? அதை செய்துகொடுப்போம். இங்கு கேசினோவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இதே கவர்னர் கிரண்பெடி பாரதீய ஜனதா ஆட்சி நடக்கும் கோவா மாநிலத்துக்கு சென்று எதிர்ப்பு தெரிவிப்பாரா? பல்வேறு மாநிலங்களில் இது போன்ற செயல்பாடுகள் உள்ளன. ஒரு திட்டம் வந்தால் அதற்கு தேவையான கட்டுப்பாடுகளை விதிப்போம்.
கவர்னர் கிரண்பெடி புதுவை மாநிலத்தின் வருமானத்தை பெருக்க என்ன செய்தார்? இதுபோன்ற கவர்னர் புதுச்சேரிக்கு தேவையா?
இவ்வாறு முதல்- அமைச்சர் நாராயணாசாமி கூறினார்.
பேட்டியின்போது அமைச்சர் கமலக்கண்ணன், அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. ஆகியோர் உடனிருந்தனர்.