குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு: முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் புளியங்குடியில் 7 ஆயிரம் பேர் பங்கேற்பு

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2019-12-27 22:30 GMT
புளியங்குடி, 

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புளியங்குடியில் 7 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.

புளியங்குடியில் ஆர்ப்பாட்டம்

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். புளியங்குடியில் ஐக்கிய ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், அனைத்து கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெரிய பள்ளிவாசலில் தொழுகை முடிந்ததும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கைகளில் தேசிய கொடி ஏந்திக்கொண்டு, குடியுரிமை சட்டத்தை திரும்ப பெறக்கோரி கோ‌‌ஷங்கள் எழுப்பியவாறு காயிதே மில்லத் தெரு, மெயின் ரோடு வழியாக காமராஜர் சிலையை வந்தடைந்தனர்.

அங்கு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மேலப்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் முகம்மது இஸ்மாயில், கீழப்பள்ளிவாசல் ஜமாத் கமிட்டி தலைவர் ரிசவப்பா ஆகியோர் தலைமை தாங்கினர். மேலப்பள்ளிவாசல் இமாம் கலீல் ரகுமான் ஆலிம் கிராஅத் ஓதி தொடக்க உரையாற்றினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான் வரவேற்றார்.

7 ஆயிரம் முஸ்லிம்கள்

ஆர்ப்பாட்டத்தில் தனு‌‌ஷ்குமார் எம்.பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் துரைஅரசன், ம.தி.மு.க. உயர்மட்ட குழு உறுப்பினர் டாக்டர் சதன்திருமலைக்குமார், நகர தி.மு.க. செயலாளர் செல்வகுமார், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை தேசிய இணைச் செயலாளர் முகம்மது அல்அமீன், ம.ம.க. மாநில துணை செயலாளர் மைதீன் சேட்கான், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் காசி விஸ்வநாதன், நகர காங்கிரஸ் தலைவர் பால்ராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள் என 7 ஆயிரம் முஸ்லிம்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி புளியங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சக்திவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தென்காசி

தென்காசி கொடிமரம் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஐக்கிய ஜமாத் தலைவர் முகம்மது இஸ்மாயில் தலைமை தாங்கினார். ஐக்கிய ஜமாத் துணைத்தலைவர் செய்யது ஜலாலுதீன், செயலாளர் முஹம்மது ஹூசைன், ஜமாத்துல் உலமா மாவட்ட செயலாளர் மஹ்மூத் மிஸ்பாஹி, ஐந்து வர்ணம் பெரிய பள்ளிவாசல் தலைவர் பாரூக், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளர் சீனா, த.மு.மு.க மாவட்ட தலைவர் ஜமால், இந்திய தவ்ஹீத் ஜமாத் மாவட்ட செயலாளர் செய்யது அலி, இந்திய தேசிய லீக் மாநில துணைத்தலைவர் சுலைமான் சேட், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச்செயலாளர் சித்திக், மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட துணைச்செயலாளர் இப்ராகிம் மற்றும் அனைத்து ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

வேம்படி பள்ளிவாசல் இமாம் மைதீன் அலி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். சிறப்பு அழைப்பாளராக தனு‌‌ஷ்குமார் எம்.பி., அய்யாவழி தர்மயுக வழி பேரவை தலைவர் பாலமுருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் செய்யது சுலைமான், த.மு.மு.க., ம.ம.க. மாநில செயலாளர் மைதீன் சேட்கான், இந்திய கம்யூனிஸ்டு காசி விஸ்வநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாஸ்கரன், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தி.மு.ராஜேந்திரன், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் திப்பு சுல்தான் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கடையம்

கடையத்தை அடுத்துள்ள பொட்டல்புதூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வீராசமுத்திரம் மவுலவி அப்துல் ஜப்பார் கிராத் ஓதினார். ஆர்ப்பாட்ட ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளர் அப்துல்காதர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். கடையம் வட்டார ஐக்கிய ஜமாத் பொருளாளர் மொன்னா முகமது சலீம் வரவேற்றார். அம்பை வட்டார ஜமாத்துல் உலமா சபை பொருளாளர் பஹ்ருதின் அலி ஆலிம் பைஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் ராமகிரு‌‌ஷ்ணன், எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் முத்து முகமது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆதித்தமிழன் அன்பழகன், கடையம் ஒன்றிய தி.மு.க செயலாளர் குமார், இந்திய யூனியன் உமன்ஸ் லீக் மாவட்ட தலைவி சபுராபேகம், ஏகத்துவ முஸ்லிம் ஜமாத் மாவட்ட தலைவர் அம்பை இப்ராகிம், த.ம.ஜ.க. மாவட்ட செயலாளர் அன்ஸர் ஆகியோர் பேசினர்.

காங்கிரஸ் சிறுபான்மையினர் பிரிவு அமீர்கான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நெல்லை மஜீத், முன்னாள் எம்.பி ராமசுப்பு ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு பொட்டல்புதூரில் கடைகள் மூடப்பட்டன. 120 அடி நீளமுள்ள தேசிய கொடியை அனைத்து மக்களும் கையில் பிடித்தவாறு நாங்கள் இந்தியர்கள் என முழக்கமிட்டனர்.

களக்காடு-விக்கிரமசிங்கபுரம்

களக்காட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஜமாத் தலைவர்கள் ஷேக் முகம்மது அலி, ஹமீது அலி, முகம்மது அலி, பீர்முகம்மது பிச்சைகனி, பைசல், ரபீக் மற்றும் 8 ஜமாத்துகளை சேர்ந்த பெண்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

பத்தமடையில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம் ஜமாத் தலைவர் செய்யது மீரான் தலைமை தாங்கினார். நகர தி.மு.க. செயலாளர் காதர், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் நிஜாம், கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ராமகிரு‌‌ஷ்ணன், எஸ்.டி.பி.ஐ. முகம்மது அலி, முஸ்லிம் லீக் முகம்மது கடாபி, தவ்ஹீத் ஜமாத் ஜமால் உஸ்மானி மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

விக்கிரமசிங்கபுரத்தில் ஜமாத் தலைவர் அபுல்கலாம் ஆசாத் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முஸ்லிம் லீக் மாவட்ட பொருளாளர் கானகத்திமீரான், இந்திய தேசிய லீக் மாநில செயலாளர் ராஜா முகம்மது, மனிதநேய மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் பாளை.ரபீக் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்