நெல்லை அருகே கோவில் இடத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கு ‘சீல்’ வைப்பு

நெல்லை அருகே நெல்லையப்பர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

Update: 2019-12-27 22:00 GMT
நெல்லை, 

நெல்லை அருகே நெல்லையப்பர் கோவிலுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் கட்டப்பட்ட வீட்டுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

கோவில் இடம்

நெல்லை அருகே உள்ள தென்கலம் பகுதியில் நெல்லையப்பர் கோவிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தை ஆக்கிரமித்து அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் வீடு கட்டி உள்ளார். வீடு கட்டுவதற்கு கோவில் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதை மீறி அவர் வீடு கட்டினார். இதை எதிர்த்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

இதை எதிர்த்து அந்த நபர் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதிலும் கோவிலுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

‘சீல்’ வைப்பு

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சங்கர், நெல்லையப்பர் கோவில் நிர்வாக அதிகாரி யக்ஞநாராணயன், ஆய்வாளர் கண்ணன், பேஸ்கார் முருகேசன், மானூர் துணை தாசில்தார் மாரியப்பன், வருவாய் ஆய்வாளர் உமா, கிராம நிர்வாக அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள் தென்கலம் பகுதிக்கு சென்று அந்த வீட்டை அகற்ற முயன்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், அந்த வீட்டை கோவில் பணியாளர்கள் பூட்டி ‘சீல்’ வைத்தனர். பின்னர் அந்த வீடு மீட்கப்பட்டதாக தட்டிபோர்டும் வைத்தனர்.

மேலும் செய்திகள்