மாவட்டத்தில் முதல் கட்ட தேர்தல் 12 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
சேலம் மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட உள்ளாட்சி தேர்தலில் 12 ஊராட்சி ஒன்றியங்களில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடந்தது.
சேலம்,
தமிழகம் முழுவதும் 27 மாவட்டங்களில் நேற்று முதல் கட்டமாக ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அதன்படி சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, காடையாம்பட்டி, கொளத்தூர், கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி, மேச்சேரி, நங்கவள்ளி, ஓமலூர், சங்ககிரி, தாரமங்கலம், வீரபாண்டி மற்றும் ஏற்காடு ஆகிய 12 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதற்காக 1,568 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 9 லட்சத்து 41 ஆயிரத்து 935 வாக்காளர்கள் உள்ளனர்.
17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், 169 ஊராட்சி ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், 194 கிராம ஊராட்சி மன்ற தலைவர், 1,914 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி என மொத்தம் 2 ஆயிரத்து 294 பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில், ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 3 கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள், 148 கிராம ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் என 152 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மீதியுள்ள 2,142 பதவிகளுக்கு மட்டும் நேற்று முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த உள்ளாட்சி தேர்தல் களத்தில் சுமார் 8 ஆயிரம் வேட்பாளர்கள் உள்ளனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இதைத்தொடர்ந்து நேரம் செல்ல, செல்ல வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள் என அனைத்து வாக்காளர்களும் காலையிலேயே ஆர்வமுடன் வந்து வாக்குச்சீட்டுகளில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர்.
அதாவது, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு மஞ்சள் நிறத்திலும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு பச்சை நிறத்திலும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலுக்கு இளஞ்சிவப்பு நிறத்திலும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலுக்கு வெள்ளை நிறத்திலும் வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
அனைத்து வாக்குச்சாவடிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றதை காணமுடிந்தது. வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு தொலைவில் அரசியல் கட்சியினர் நின்று கொண்டு தங்களது வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டனர். தாரமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட அமரகுந்தி வாக்குச்சாவடி மையத்தில் காலை முதலே வாக்காளர்கள் திரண்டு வந்து தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
சங்ககிரி தொகுதி ராஜா எம்.எல்.ஏ. தனது சொந்த ஊரான மகுடஞ்சாவடி ஒன்றியத்திற்கு உட்பட்ட அ.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். அவர், வாக்காளர்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார். இதேபோல், ஏற்காடு தொகுதி சித்ரா எம்.எல்.ஏ. மஞ்சக்குட்டை ஊராட்சி கிரேய்க்மோர் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு நேரில் சென்று வாக்களித்தார்.
எடப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட சிலுவம்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்கு 90 வயதான மதலைமுத்து என்ற முதியவர் ஆர்வமுடன் வந்து வாக்களித்தார். அவரை உறவினர்கள் சக்கர நாற்காலியில் அமர வைத்து வீட்டில் இருந்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்தனர். இதே போல சின்னப்பிளையூர் வாக்குச்சாவடிக்கு 105 வயது மூதாட்டியை உறவினர்கள் வாக்களிக்க தூக்கி வந்தனர்.
வீரபாண்டி ஒன்றியத்துக்குட்பட்ட மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி, தாரமங்கலம் ஒன்றியம் அழகுசமுத்திரம் ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி ஆகிய இடங்களில் கலெக்டர் ராமன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது வாக்குப்பதிவு நிலவரங்கள் குறித்து தேர்தல் அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.