காரையாறில் பரிதாபம் ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் சாவு

காரையாறில் ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-12-27 21:30 GMT
அம்பை, 

காரையாறில் ஆற்றில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

பிளஸ்-1 மாணவர்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூரை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பாண்டீஸ்வரன் (வயது 17). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார். தற்போது அரையாண்டு தேர்வு விடுமுறையையொட்டி வீட்டில் இருந்தார். மதுரையில் இருந்து வந்திருந்த அக்காள் மற்றும் அவரது கணவருடன் பாண்டீஸ்வரன் நேற்று நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சென்றார்.

முன்னதாக கோவில் முன்பாக ஓடும் தாமிரபரணி ஆற்றில் பாண்டீஸ்வரன் குளிக்க சென்றார். அப்போது அவர் எதிர்பாராதவிதமாக சுழலில் சிக்கினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை. பின்னர் இதுபற்றி அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

ஆற்றில் மூழ்கி சாவு

இதையடுத்து நிலைய அலுவலர் இசக்கியப்பன் தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். பாண்டீஸ்வரனை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆற்றில் தண்ணீர் அதிகமாக ஓடியதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசியதை தொடர்ந்து, ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஆற்றுக்குள் இறங்கி தீயணைப்பு நிலைய வீரர்கள் தேடினர். அங்கு தண்ணீருக்குள் மூழ்கி பிணமாக கிடந்த பாண்டீஸ்வரன் உடலை கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். தம்பியின் உடலை பார்த்து அக்காள் கதறி அழுதார். தகவல் அறிந்ததும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அவரது உடலை கைப்பற்றி அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்